குடவாசல் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் வேண்டுமென பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு என தனியாக கட்டடமும் இடமும் கிடையாது.
இந்த நிலையில் தங்கள் கல்லூரிக்கு தனியாக இடமும் நிரந்தர கட்டடமும் அமைத்துத் தர வேண்டும் என தொடர்ந்து இந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
அதன்பிறகு விளமல் பகுதியில் இருந்து பேரணியாக வந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM