பாட்னா: சானிட்டரி நாப்கினை சலுகை விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த பள்ளிச் சிறுமிஇடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பீகார் மாநில குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை செயலருமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா அடுத்து அரசிடம் இருந்து ஆணுறையை கேட்பீர்கள்… அப்படித்தானே’ என பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீகாரில், ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பள்ளி சிறுமிகளும், மாநில குழந்தைகள் நல மேம்பாட்டு துறை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா உள்பட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது பேசிய சிறுமி ஒருவர்: அரசு எங்களுக்கு பள்ளி சீருடைகள் உள்பட எங்களுக்கு தேவையானவற்றை வழங்குகிறது. இந்த அரசால் சானிட்டரி நாப்கினை 20-30 ரூபாய்க்கு வழங்க முடியாதா?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அங்கிருந்த மாணவிகள் கைகளை தட்டினார் அந்த கருத்தை ஆமோதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 9, 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகள்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த ஐஏஎஸ் அதிகாரி பாம்ரா: கைத்தட்டும் சிறுமிகளே உங்களது கோரிக்கைளுக்கு முடிவு இருக்கிறதா என்பதை சொல்ல வேண்டும். நாளைக்கு நீங்கள் அரசிடம் ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள். அதற்கு பிறகு அழகான ஷூக்கள் கேட்கலாம். அரசிடம் நீங்கள் ஆணுறை கூட கேட்டு கோரிக்கை வைக்க கூடும். ஏன் எல்லாவற்றையும் இலவசமாக பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றார்.
ஐஏஎஸ் அதிகாரியின் இந்த பதிலை கேட்டு சிறுமிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமி: மக்கள் வாக்களித்துதானே அரசை உருவாக்குகிறார்கள்’ என்றார்.
பாம்ரா: இது முட்டாள்தனமான பதில். நீங்கள் வாக்களிக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு போங்கள். பணத்திற்கும், சேவைக்கும் தானே வாக்களிக்கிறீர்கள்?’ என்று கூறினார்.
சிறுமி: நான் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும். நான் இந்தியன்’ என்று கூறி அதிர வைத்தார்.
இவ்வாறு சிறுமிக்கும், ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ராவுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.