தமிழ்நாட்டில் நீண்ட காலமாகப் போலி பத்திரப்பதிவு நடந்துகொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பலரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் பல முயற்சிகள் எடுத்தும் இந்த போலி பத்திரப்பதிவைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 1980-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் மூர்த்தி, “கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவுத்துறை அலுவலருக்கு அதிகாரம் கிடையாது. இதனைச் சரி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவுத்துறை அலுவலருக்கு வழங்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பல்வேறு துறை சார்பில் இந்த மசோதா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த சட்டத்துக்குச் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தார்.
தற்போது இந்த திருத்தப்பட்ட சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், பதிவாளர், பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி பிரிவுகளுக்கு முரணாகப் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று கருதினால், அவர் தாமாகவோ அல்லது புகார் மீதோ நடவடிக்கை எடுத்துப் பதிவை ரத்து செய்யலாம். பதிவுத்துறைத் தலைவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. அப்படி ஒரு பத்திரம் ரத்து செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல் முறையீடு மனு அடிப்படியில், பதிவுத்துறைத் தலைவர், பதிவாளரின் உத்தரவை உறுதிப்படுத்துதல், திருத்துதல் அல்லது ரத்து செய்து உத்தரவு வழங்க முடியும்.
போலியான ஆவண பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட பதிவாளர்களால் புகார் பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் முன்னிலையில் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் போலியான ஆவணம் என்று கண்டறியப்பட்டால், புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 77-ஏ படி ரத்துசெய்யப்படும். பதிவுத்துறைத் தலைவர் வழங்கிய உத்தரவை எதிர்த்து, இந்த உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து அடுத்த 30 நாள்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல், போலியான ஆவணத்தைப் பதிவு செய்தால், அந்த பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்திருத்தத்தில் இடமிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பதிவை ரத்து செய்வது தொடர்பாகப் பத்திரப்பதிவு துறைத் தலைவருக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்திருக்கிறது. இந்த மனுக்கள் மீது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, போலி ஆவண பதிவால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்தின் உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு மோசடியாகப் பதிவுசெய்யப்பட்ட ஆவண பதிவை ரத்து செய்த ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.