உடுமலை: உடுமலை அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு குடிமங்கலம் ஒன்றியம் அம்மாபட்டி வழியாக ஆமந்தகடவு நோக்கி அரசுபஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உடுமலை, பெதப்பம்பட்டியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயணித்தனர். பஸ் வடுகபாளையம்- சனுப்பட்டி இடையே பாலம் ஒன்றில் சென்று வளைவான பகுதியில் திரும்பியபோது பாலத்தில் அருகேயுள்ள இருந்து தவறி உப்பாறு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த வல்லகொண்டாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (45), கல்லூரி மாணவிகள் கலைசெல்வி, தேன்மொழி, பள்ளி மாணவிகள் பிரியங்கா, வசந்தரா, வித்யாவிகாஷினி, காளிதர்ஷினி, மற்றும் பஸ் டிரைவர் சதீஷ், கண்டக்டர் பாண்டியன் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
படுகாயம் அடைந்த வெங்கடாசலம், உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு பஸ் பள்ளத்திற்குள் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இன்று காலை 7.30 மணி அளவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்த்து ஆறுதல் கூறினார்.