சினிமா உலகில் ஊறித்திளைத்து அழுத்தமாக வெற்றிக் கொடியை நாட்டி, நூற்றுக்கணக்கில் பேட்டிகளைப் பார்த்துப் பழகிவிட்ட நடிகர்கள் ஒரு பத்திரிகையாளரைப் பேட்டிக்காகச் சந்திக்கும் போது முதலில் என்ன செய்வார்கள்?
கன்னட நடிகர் ராஜ்குமாரும் சரி, நம்முடைய நடிகர் திலகமும் சரி – ஒன்றைத்தான் செய்தார்கள். அதாவது தன்னந்தனியே(!) வந்து நெருக்கமாக ‘ரிலாக்ஸ்’டாக அமர்ந்து நம் முகத்தை நேருக்கு நேர் பார்த்தார்கள் – ‘நான் தயார், கேள்விகளை ஆரம்பிக்கலாம்!’ என்பதைப் போல. ஒரு உதவி… எடுத்துக் கொடுத்தல் கிடையாது. வந்திருக்கிறார்களே, ஏதாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே என்ற பரபரப்பு.. ஊஹூம்!
நாம் சந்தித்தபோது கமல் செய்ததும் இதையேதான். நிசப்தத்தைக் கலைப்பதற்காகவாவது வாரிச் சுருட்டிக் கொண்டு எதையாவது கேட்டால்தான் சரிப்படும் என்கிற எண்ணம் நமக்குச் சற்றுக் கவலை தந்தது!
கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது எதிர் பிளாட்பாரத்தில் பல்வேறு உயரங்களில் இளைஞர்கள் கும்பலாக நின்றுகொண்டு வாசலில் உள்ள பெரிய இரும்பு கேட்டையே மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாம் போய் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தோம். மற்றபடி ‘டெகரேஷனுக்கு’ எல்லாம் முக்கியத்துவம் தராத அந்தக் கால டாக்டர் கிளினிக் மாதிரி (ஆபீஸ்) பங்களா ஹாலைப் பிரிக்க மரத்தடுப்புகள். சில நிமிடங்களில் மஞ்சள் நிற ஜாகிங் உடையில் வந்தார் கமல். உட்கார்ந்த பிறகு ஒரு புன்னகை… ஹலோ… பிறகு நாம் முன்னே சொன்ன மாதிரி நம்மைப் பாார்த்துக் கொண்டு மெளனம்..!
உள்ளே சுற்றும்முற்றும் அமைதியான புன்னகையுடன்கூடிய கமலின் அம்மாவின் பெரிய படம் மட்டும் சுவரை அலங்கரித்தது.
கமலுக்கு இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கும் ஓர் அதிர்ஷ்டம் – மென்மையாக, ஸ்லோமோஷனில் வயதாவது! குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து 30 வருட அனுபவம் கமல் பின்னால் உண்டு என்பதை மறக்காமல் இருக்க வேண்டியிருக்கிறது.
எந்தப் பேட்டியும் கமலுக்குப் பிரச்னையாக இருக்காது என்று பட்டது! சில நிமிடங்கள் நம்முடன் பேசிய உடனேயே நம் ‘சரக்கை’ கண நேரத்தில் எடை போட்டுவிடுகிறார் கமல். அவர் தலைக்குள் நிறைய Knobs இருக்க வேண்டும். அதைத் திருகி எதிராளியுடன் உரையாடுவதற்கான ‘அலைவரிசை’யைக் கொண்டு வந்துவிடுகிறார்.
எழுத்தாளர்கள் ஷான் பால் சார்த்ரே, ஆம்ப்ரோஸ் பியர்ஸ்…? இயக்குநர்கள் அகீரா கூரஸோவா, ட்ருஃபா…? – ஓர் அலைவரிசை தயார்!
“உங்களுக்குப் பிடித்த வண்ணம் எது?” என்று பேட்டி ஆரம்பமா? – இன்னொரு அலைவரிசை ரெடி!
ஒரு திருப்தியான விஷயம் – பேச ஆரம்பித்துவிட்டால் கமலுக்கு ஏக ‘ஸ்பீடி’ல் சூடு பிடிக்கிறது. பிறகு போயிங் விமானம் கிளம்புவது போலத்தான்! சகல கோணங்களிலேயும் ஒரு கேள்வியைப் பதிலுக்காக அலசுகிறார். ஒவ்வொரு கேள்விக்கும் கமல் பதில்கள் Roller Coaster பயணம் மாதிரி அமைகிறது! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டுச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டுவிடலாம். கமல் பேட்டிக்கான ஐந்து பக்க விஷயம் நம் கையில்: ஆனால், நாம் அப்படி விடுவதாக இல்லை…!
கமல் நான்கு வேடங்களில் புகுந்து விளையாடியிருக்கும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ ரிலீஸாவதற்கு மூன்று நாட்கள் முன்புவரை, ரிலீஸ் பற்றிய விளம்பரங்கள் வரவில்லை. துடித்துப் போனார்கள் கமல் ரசிகர்கள். ‘படத்துக்கு சென்ஸார் கெடுபிடிகள் அதிகம். ‘கமலுக்குப் படம் பிடிக்கவில்லை, அதனால் படத்தின் ரிலீஸைத் தடை செய்கிறார் கமல்’ என்றெல்லாம் வதந்திகள்.
“நீங்கள் நடிக்கும் படங்களில் நீங்கள் அதிகமாகத் தலையீடு செய்கிறீர்களாமே.. ‘மைக்கேல் மதன காமராஜன் படத்துக்குக் கூட ரிலீஸ் அறிவிப்பு தாமதமாக வந்ததற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்களே?’ என்று ஆரம்பித்தோம்…
‘என்னால தாமதம்னு கண்டிப்பா எந்தத் தயாரிப்பாளரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா என்னுடைய படத்துல என் முழு ஒத்துழைப்பும், ஈடுபாடும் இருக்கும். மற்ற பலரைவிட கதையோட நான் ரொம்பவும் இன்வால்வ் ஆகிறேன். அது தயாரிப்பாளருக்குப் பிடிச்சிருக்கு. `மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின்போது டைரக்டர் சீனிவாசராவ் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்டார். ஒரு பாட்டு முழுவதையும் நானும், என் நண்பர்களும் உட்கார்ந்து ‘எடிட்’ பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவையா எனக்கு? இதெல்லாம் ஒரு ஹீரோ பண்ண வேண்டிய அவசியமா? ஆனால், என்னால அப்படி ஒதுங்க முடியாது. சினிமா! என் தொழில் இல்லே… என் சந்தோஷம். ஐ இம்மென்ஸ்லி என்ஜாய் சினிமா! அதே மாதிரி சில டைரக்டர்களின் படத்துல கதை டிஸ்கஷன்போது நானும் கலந்துப்பேன்… ஷ்யூர்!”
“எல்லா டைரக்டர்களிடமும் இப்படித்தானா?”
”செட்ல நான் வெறும் நடிகனா இருக்கணும்னா அந்த டைரக்டர் மேல எனக்கு நம்பிக்கை வரணும். ‘நாயகன்’ படத்துல ‘நீ சிரித்தால் தீபாவளி’ பாட்டு ஷூட் பண்ணிக்கிட்டிருந்தோம். அந்த ஸீன்ல ஜனகராஜ் என் பக்கத்துல நின்னு ‘ஏதோ சில்மிஷம் பண்ணுவது போல காட்சி. நான் ஒருவித சலிப்போடு முகத்தைத் திருப்புவேன். மணிரத்னம் உடனே, ‘கமல், அந்த எக்ஸ்பிரஷன் வேண்டாம். நம்ம ஸ்டைலில் உங்கள் சலிப்பைக் காட்டுங்கள்’ என்றார். அவர் சொன்னது சரி! காரணம், நான் காட்டியது மேற்கத்திய எக்ஸ்பிரஷன்… ‘பிளடி ஷிட்’ என்பதைப் போல. அந்த இடத்தில் ஒரு தமிழன் எப்படி முகபாவம் காட்டுவான்? உடனே மாற்றிக் கொண்டேன். கூடவே எனக்கு டைரக்டரிடம் நம்பிக்கை வந்து விட்டது. இந்தப் படத்துல நாம வெறும் நடிகனா மட்டும் இருந்தா போதும், டைரக்டர் பார்த்துக்குவார்ங்கிற நம்பிக்கை! அவர் சொன்னதை மதிச்சு நடிச்சிட்டு வந்தேன்…”
“ஒருவேளை ‘நாயகன்’ அடிப்படை ‘காட்ஃபாதர்’ படம் என்பதால் அந்த டைப் எக்ஸ்பிரஷன்…?!”
“அந்தப் படம் God Fatherனுடைய பாதிப்புதான். அந்த நாட்களில் Mario puzo-வின் காட்ஃபாதர் நாவல் படிச்சிட்டு, ஆழ்வார்பேட்டை முனையில நின்று நிறைய விவாதிச்சிருக்கோம், இந்தக் கதையைப் படமா எடுத்தா யார், யார் நடிப்பாங்கன்னு நாங்களே தெரு முனையில இருந்து ஹாலிவுட் படத்துக்கு நட்சத்திரத் தேர்வு நடத்தியிருக்கோம். அந்தப் படம் எங்க எல்லாருக்குள்ளேயும் பதிஞ்சு கிடந்தது. பட்… ‘நாயகன்’ காட்ஃபாதர் கதையில்லை. நாயகனுக்குப் பெரிய வெற்றியும், பேரும் கிடைச்சுதுன்னா அதுவும் முழுவதுமா ஆராய்ச்சி செஞ்சு எடுத்த படம். ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஒரு டீம் வொர்க் நடக்கும்போது நானும் என் கருத்துகளைச் சொல்லாமல் இருக்க முடியாது!”
“எல்லாப் படங்களிலும் இப்படி முடிகிறதா…?”
“நியாயமான கேள்வி! கையை மீறிப் போகிற விஷயங்கள் சினிமாவில் நிறைய உண்டு. ‘சூரசம்ஹாரம்’ படத்தையே எடுத்துக்குங்க. படம் ஆரம்பிக்கும்போது French Connection II படத்தை எடுக்குறதாத்தான் இருந்தோம். ஆனால், வெவ்வேறு காரணங்களால் படம் எப்படியோ திசைமாறிப் போச்சு. ஒரு ஸ்டேஜுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியலை. விட்டுட்டேன்.”
“பாலசந்தர் படத்தில்… உதாரணமாக ‘உன்னால் முடியும் தம்பி’…?'”
“அந்தப் படத்துக்குப் பூஜை போடற அன்னிக்கே, அது தெலுங்குல தோல்வி அடைஞ்ச படம்னு தெரியும். அந்தப் படத்தை எங்க டைரக்டர் பாலசந்தர் ‘தமிழ்ல நிச்சயம் நான் சக்சஸ் பண்ணிக் காட்டுவேன்’னுதான் ஆரம்பிச்சார். அங்க நான் தலையிடவோ, மறுப்பு சொல்லவோ முடியாது. ஏன்னா, என் கையைப் புடிச்சு இழுத்து வந்து ‘ஏக் துஜே கேலியே’ வரைக்கும் வளர்த்து விட்டவருக்குத் தெரியாதாங்கிறதுதான்!
‘மன்மத லீலை’ படத்தின்போதுதான் இப்படிப் பண்ணலாமா, அப்படிப் பண்ணலாமான்னு மெதுவா யோசனை சொன்னேன். அதுவும் அனந்து சாரிடம் சொல்லித்தான் டைரக்டர் காதில போட வைப்பேன். என்னுடைய தலையீட்டை நியாயப்படுத்தவோ, நான் தலையிடாததனால இந்தப் படங்கள் தோல்வி அடைஞ்சுதுன்னு கர்வத்தோடவோ நான் பேசலே… எல்லாப் படங்களுமே ஒரு `டீம் வொர்க்’! எங்க அணியின் தோல்வியை நாங்களே எடை போட்டுப் பார்க்கறோம். ‘ராஜபார்வை’ ஒரு காலத்துல எனக்கு லட்சியப் படம். இப்ப யோசிச்சுப் பார்த்தா… எங்களுக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் அந்தப் படத்துல திணிச்சு, எங்க புத்திசாலித்தனத்தைக் காட்டணும்கிற திமிர்தான் இருந்தது. அது இப்பத்தான் எனக்கு நல்லா புரியுது!”
“புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உங்க வேகத்தை… இங்கிலீஷில் சொல்வார்களே ‘in Search of Excellence’ என்று .. அதற்கு ஒப்பிடலாமா? அதற்கான ஆர்வம்… வருத்திக் கொள்ளுதல்… சினிமாவுலகில் மிகச் சிலருக்குத்தான் இருக்கிறது. ஒப்புக் கொள்கிறீர்களா?”
“அது எனக்கு உண்டுதான்! அந்த எக்ஸலன்ஸைத் தேடிச் செல்லும் ஆவேசமுள்ளவர்கள் என்னைவிட நிறையப் பேர் இருக்காங்க! எனக்கு இப்ப பொருளாதாரப் பலம் வந்திருச்சு. என்ன வேணும்னாலும் பண்ணலாம்கிற ஒரு துணிச்சல் இருக்கு. நம்ம பழைய நடிகர் எஸ்.வி. சுப்பையாவுக்கு இருந்த சினிமா தாகத்தை விடவா? ஒவ்வொரு ஃபிலிம் பெஸ்டிவல்லயும் அவரைப் பார்க்கலாம். ஃபெலினி படத்துக்கெல்லாம்கூட வருவார். சமயத்தில் இங்கிலீஷ் புரியலைன்னா கேட்டுப்பார். ஃபெலினி பெயர்கூட உச்சரிக்க வராது. நம்மைச் சொல்லச் சொல்லிக் கேட்பார். ஜெயகாந்தனுடைய ‘பிரும்மோபதேசம்’ கதையை அவர் படமா எடுத்தார். ரிலீஸ் பண்ண முடியாம சிக்கல். பெட்டியைப் பரண் மேல போட்டு வெச்சிருப்பார். பல பேருக்கு அந்தத் தாகம் இருக்கு… ஆனா, அதுக்கேத்த வசதி வாய்ப்புகள் இல்லை. திறமை இருக்கு… ஆனா, தியாகம் பண்ண இங்கே யாரும் தயாராக இல்லைங்கிறதுதான் உண்மை.
கமலுக்குக் காலை நீட்டிக்கொண்டு இன்னும் சற்று ரிலாக்ஸ்டாக உட்காரலாம் என்று தோன்றியதோ என்னவோ ‘மாடிக்குப் போகலாம்’ என்றார். சில நிமிடங்கள் கழித்து கூல்டிரிங்க்ஸ் வந்தது. கமல் கால் டம்ளர் காபி மட்டும் தனக்குச் சொல்லியனுப்பினார்.
“என்ன பேசினோம்?… ஆங்… தியாகம்!” என்று கமல் ஆரம்பிக்க… பவர் கட். கொஞ்ச நேரத்தில் நெற்றியில் லேசாக வியர்த்தது. ஆனால் பேச ஆரம்பித்து விட்டால் லைட் இல்லையே ஃபேன் இல்லையே என்றெல்லாம் கமல் கவலைப்படுவதில்லை..!
“தியாகம் என்பது சற்று பெரிய வார்த்தை. இப்ப நான் ஒரு வித்தியாசமான பரிசோதனைப் படம் எடுக்கிறேன்னு வெச்சுப்போம். அந்த நேரத்தில் நான் கமர்ஷியலாகச் செயல்பட்டால் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம். அந்த லட்சங்களை நான் வேண்டாம் என்று சொல்வது அது என்ன பெரிய தியாகம்? பச்சையாக ஒப்புக்கொள்ள வேண்டுமென்றால் இதனால் நான் வீட்டில் ஒரு ஸ்விம்மிங்பூல் கட்டுவதைத் தள்ளிப் போடுகிறேன் என்றுதான் அர்த்தம்! ஸோ. யாராவது ‘கமல் எப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்கிறார்!’ என்று வியந்தால் எனக்குக் கூச்சமாகி விடுகிறது. எந்த ஃபீல்டாக இருந்தாலும் சரி… ஒரு வசதியும் இல்லாத நிலையில் உயிரைப் பணயம் வைத்துக் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறார்களே… அவர்கள் செய்வதுதான் தியாகம்” என்றார் கமல்.
1986-க்குப் பிறகு தனக்கு வந்த புது தெம்பு பற்றிக் குறிப்பிட்டார்.
“அப்போது எனக்கு இருந்த மனநிலை… நான் எடுத்த துணிவான முடிவுகள்… அதனால் ஏற்பட்ட திருப்பம்தான் என் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம்…! 1986-ஐ வேண்டுமானால் சொல்லுங்கள். அப்போது நான் எதையும் தியாகம் பண்ணத் தயாராக இருந்தேன்!”என்றார்.
“1986-ம் வருடத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம்’?”
‘என் சொந்தப் பிரச்னைகள் காரணமா பொருளாதார ரீதியில நான் ரொம்பவும் நொடிச்சுப் போன சமயம் அது. ‘back to square one’ம்பாங்களே. அதுமாதிரி ஆரம்பிச்ச இடத்துக்கே திரும்பி வந்தேன். அப்ப எனக்குன்னு இந்த ‘ராஜ்கமல் இன்டர்நேஷனல்’ ஆபிஸைத் தவிர வேறு எந்த சொத்தும் கிடையாது. வாடகை வீட்லதான் இருந்தேன். என்னுடைய சம்பாத்தியத்தையெல்லாம் சினிமா எக்யூப்மெண்ட்ஸ்லதான் முதலீடு பண்ணியிருந்தேன். அப்பதான் இனிமேல் இழக்கறதுக்கு ஒண்ணுமில்லே… ‘ரிஸ்க்’ எடுத்துப் பார்க்கலாம்னு தோணிச்சு ‘நாயகன்’ஆரம்பிச்சோம்.
கன்னடத்தில போய் ஒரு புது புரொட்யூஸருக்கு ‘புஷ்பக்’ (பேசும் படம்) படம் பண்ணினேன். அந்தச் சமயத்திலதான் திடீரென்று ‘அப்பு’ காரெக்டர் மனசுல உருவாச்சு. ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆரம்பிச்சோம். அந்தப் படத்தை வேறு ஒரு தயாரிப்பாளருக்குப் பண்ணியிருந்தேன்னா… நானும் அவரும் ஜென்ம விரோதிகள் ஆகியிருப்போம். முதல்ல கிட்டத்தட்ட எட்டாயிரம் அடி எடுத்து, போட்டுப் பார்த்து பிடிக்கலைன்னு தூக்கியெறிஞ்சிட்டு மறுபடியும் புதுசா ஒரு கதை பண்ணினோம்”
” ‘அப்பு’ங்கிற காரெக்டர் தவிர. அந்தப் படமும் வழக்கமான பழிவாங்கற மசாலாக் கதைதானே?”
“ஒப்புக்கறேன். புதுசா ஒண்ணும் சொல்லலைதான். காரெக்டர்லயாவது புதுசா பண்ணலாம்கிற ஒரு ஆரம்ப முயற்சி. அவ்வளவுதான்! இன்னும் கேட்டால், இப்ப மறுபடி ‘அபூர்வ சகோதரர்’கள் எடுத்தா ஒரு அற்புதமான படத்தையே உருவாக்கிக் காட்டுவேன். அது பெரிய சக்ஸஸ் ஆகிப்போன படம்… அண்ட் நெள இட்’ஸ் டூ லேட் டூ இம்ப்ரூவ் இட்!” – புன்னகைத்தார் கமல்.
“உங்க சினிமா Career ஆரம்பகட்டத்துல நீங்களே சில முயற்சிகள் பண்ணி, அதிலே தோல்வியும் கண்டீர்கள்… இல்லையா? அதற்குப் பிறகுதானே ஒரு எச்சரிக்கையோடு மசாலா பாணியில் இறங்கினீர்கள்?”
“அப்ப இருந்த நிலைமை வேற. அந்தச் சமயம் நான் நடிகனாவேன்னு கூட நினைச்சுப் பார்த்ததில்ல. நல்லா படிச்ச குடும்பம். அப்பா, அண்ணன்கள் எல்லாரும் வக்கீல்கள். எனக்குப் படிப்பு வரலை. எதுக்குமே லாயக்கில்லாம போய்டுவேன்ங்கிற சூழ்நிலை. எனக்கு, ஏதாவது வழிகாட்டணுமேன்னு எங்கம்மாதான் ரொம்பக் கவலைப் பட்டாங்க. அதுக்காக எனக்கு டான்ஸ் கத்துக் குடுக்க வெச்சாங்க. ஆழ்வார்பேட்டை வீட்டுல எப்பவும் டான்ஸ் பிராக்டீஸ், அதுக்கப்புறம் மதுரை வெங்கடேசன்னு ஒருத்தர்கிட்ட பாட்டுக் கத்துக்கிட்டேன். டான்ஸ் முடிச்சு சினிமாவில டான்ஸ் அசிஸ்டெண்டா சேர்ந்தேன். வருமானமில்லை. உடனே எங்கம்மா கை வளையலை வித்து. எங்க வீட்டுக்கு பின்னாடியே டான்ஸ் ஸ்கூல் நடத்தறதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க.”
“சினிமா வெறி அப்ப முழுசா ஏற்படாத சமயம்…?!”
“ஏற்பட்டது..! ஒரு பக்கம் சினிமா வெறி. ஒரு பக்கம் லைஃப்ல செட்டிலாகணும்ங்கிற பயமும் இருந்த நேரம் அது! எல்லாவற்றையும் ‘கிரிட்டிகலா’க அலசும் வித்தியாசமான நண்பர்கள். மெட்ராஸ்ல வர்ற படங்கள்லாம் பாத்து, ‘இவனெல்லாம் படம் எடுக்கிறான்’னு எல்லாப் படத்தையும் ஒரு அறிவுஜீவித்தனத்தோட தூக்கியெறிவோம். அந்த ஆரம்பக் கால கட்டத்திலதான் நான், ஆர்.சி.சக்தி எல்லாம் சேர்ந்து ‘உணர்ச்சிகள்’ படம் ஆரம்பிச்சோம். அந்தப் படத்தின் பின்னணியில் எவ்வளவோ சோகமான அனுபவங்கள் உண்டு. படம் ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டுப் போன புரொட்யூலர் பூஜை அன்னிக்கு ஆளையே காணோம். கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் எதிரே இருக்கிற அப்சரா லாட்ஜில அவரைத் தேடிப் போனா, மனுஷன் தற்கொலை முயற்சியில இருந்தார். பணம் கொடுக்கறேன்னு சொன்ன ஃபைனான்ஸியர் ஏமாத்திட்டார். அப்புறம் அவரைத் தேற்றினோம். அவர்கிட்ட இருந்த பணம் ரொம்பக் குறைவு. ஒரு நாள் ஷூட்டிங்குக்குக்கூடப் பத்தாது! பிறகு நானும், சக்தியும் கோடம்பாக்கம் பாலத்தில நடந்து வந்து, இந்தப் பக்கம் வந்தபோதுதான் ‘உணர்ச்சிகள்’ படத்தினுடைய கதை உருவாச்சு. அந்தப் படத்தோட டைரக்டர் சக்திக்கு பூஜை அட்வான்ஸ் வெறும் பத்து ரூபாய். ஹீரோயின் எல்.காஞ்சனாவுக்கு அஞ்சு ரூபாய்தான். வெறும் அஞ்சு, பத்து!
அந்தப் படம் ரொம்ப லேட்டா ரிலீஸ் ஆச்சு. எனக்கோ அன்றாட வாழ்க்கையே பிரச்னையாப் போச்சு. சினிமாவுக்குள்ள எப்படியாவது நுழையணும்னு, வர்ற படங்ளை ஒப்புக்குவேன். ‘பட்டாம்பூச்சி’ படமெல்லாம் அந்த சமயப் படங்கள்தான். ஆனால், உள்ளுக்குள்ள ‘இந்த மாதிரி படங்கள் பண்றோமே’ன்னு நினைப்பேன். ஏன்னா, அந்த மாதிரி படங்கள்ல நடிச்சா, கூட இருக்கிற நண்பர்கள் கிழிச்சுத் தோரணம் கட்டுவாங்களோங்கிற பயம். ‘தமிழ் சினிமாவை இவ்வளவு கிழிகிழின்னு கிழிச்சுட்டு இவனும் சோரம் போயிட்டானே’ன்னு சொல்லுவாங்களோன்னு பயம். உடனே ‘பாலன்ஸ்’ பண்ண ‘அவள் அப்படித்தான்’ படம் ஒப்புக் கொண்டேன்.’
“அப்புறம் மனநிலை ஸ்டெடியாக என்ன காரணம்?”
‘யார் காரணம் என்று கேளுங்கள். ஒரே வரியில் சொல்லணும்னா – அனந்து சார்! இந்தக் குழப்பமான காலகட்டத்தில என்னை ஷேப் பண்ணினவர் அனந்து சார்தான். சினிமாவில என் பாதை என்னன்னு காட்டியவர். இன்னும் சொல்லப்போனா இப்ப என் குடும்பத்தில ஒருத்தர்.”
“பொதுவாகவே நீங்க ரொம்ப கால்குலேட்டிவ், எதையும் குள்ளநரித்தனத்தோட செய்யற Opportunist-ன்னு சினிமா ஃபீல்டிலே ஒரு பெயர் உண்டே…?”
“அப்படிப் பார்த்தால் யார் சந்தர்ப்பவாதி இல்லை? பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நான். நீங்கள்… யார்தான் ஒவ்வொரு விதத்தில் சந்தர்ப்பவாதி இல்லை? எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி அடைய, பிரச்னைகளைச் சமாளிக்க யோசனை செய்கிறார்கள்… திட்டம் போடுகிறார்கள். நான் சற்று அதிகமாக யோசிப்பேன்… திட்டமிடுவேன். சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பேன்… அது குள்ளநரித்தனமா? எனக்குக் குள்ளநரித்தனமிருந்தா, 1986-ல் பணச் சிக்கல் வந்திருக்காது. இன்னிக்கும்கூட வருமானம் தரக்கூடிய சொத்துக்களோ, வருமானமோ எனக்குக் கிடையாது. வீடு கூட இப்பதான் கட்டி முடிச்சேன்.
என் பர்சனல் லைஃப்ல எனக்குச் சிக்கல் வந்தப்ப எனக்கு நண்பர்கள் யாரு, எதிரி யாருன்னே தெரியலை. In Fact ஒருத்தர்கிட்ட நான் போன் பண்ணியே கேட்டேன். “ப்ளீஸ்… நீங்க எனக்கு ஃப்ரெண்டா, எதிரியான்னு சொல்லிடுங்க. நண்பனா இருந்தா மன்னிச்சுடறேன். எதிரியா இருந்தா என்னை நான் பாதுகாத்துப்பேன்’னு வெளிப்படையாவே கேட்டேன்!’
“உங்க ஆரம்ப நாட்கள்ல. உங்களுக்கு ஒரு ‘ப்ளே பாய்’ இமேஜ் இருந்தது. உங்களுடைய பேட்டிகளும் பகிரங்கமா இருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு நீங்களே ஏற்படுத்திக்கிட்ட ‘இமேஜ்’தானே?”
“அதைக்கூட ‘திட்டமிட்டு’ன்னு சொல்ல மாட்டேன். ஒருவித காம்ப்ளெக்ஸ்ல பண்ணினதுன்னுகூடச் சொல்லலாம். அப்ப நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். என்னுடைய நடன அரங்கேற்றம் ஆர்.ஆர். சபாவில நடந்தது. விழாவுக்கு டி.கே. சண்முகம் வந்திருந்தார். அவர் பேசும்போது ‘ஆண் நாட்டியம் கத்துக்கும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். பெண்மைக்குண்டான நளினம் உடம்பில தங்கிடற வாய்ப்புண்டுன்னு’ சொன்னார். நான் சினிமாவில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்போ, டான்ஸ் தெரியும்கிறதனால ‘பொட்டை’ மாதிரி இருக்கான்னு சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காக, பெரிய மீசை, நிறைய தலைமுடி வெச்சுக்கிட்டேன். நிறைய பெண்களோடு தொடர்பு இருக்கிற மாதிரி நானே நிறைய சத்தம் போட்டேன். என்னுடைய அபரிமிதமான கற்பனைக்கு நானே நிஜ உருவம் கொடுக்க ஆரம்பிச்சேன். நான் ஏற்படுத்திக்கிட்ட ‘காஸனோவா இமேஜ்’படி பார்த்தா, நான் தாசி வீடே கதின்னு இருந்திருக்கணும். ஆனால், இதுவரை அந்த மாதிரி போனதில்லை. நானும் எல்லாவித சலனங்களுக்கும் உட்பட்ட, தவறுகள் செய்த சராசரி மனிதன்தான். என் நண்பர் ஒருவர்கூட எங்கிட்ட கேட்டார். ‘கமல், உங்களுக்கு செக்ஸுங்கிறது பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டிபன், டின்னர் மாதிரிதானே?’ன்னார். நடக்கிற காரியமா இது?
(சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு…)
பத்து வருஷம் கழிச்சு, இந்த நிஜம் பேசற தைரியம் வருது… நான் தேனாம்பேட்டையைத் தாண்டி, கோடம்பாக்கம் போகமாட்டேன்னு பலபேர் சொன்னாங்க… அப்ப என் திருமணம்கூட பம்பாய்லதான் நடந்தது. அதுவும் ‘மிஸ் இண்டியா’ கூட
“உங்கள் முதல் திருமணம் முறிந்து போனதைப் பற்றி…?!“
“அந்த விஷயமா நான் இப்போது எதுவும் பேச விரும்பலை. ஒண்ணு மட்டும் சொல்வேன். என்னுடைய எல்லா செயல்களையும் நான் Genuine-னாகத்தான் செய்கிறேன். விவாகரத்து செய்வதற்கு முன் ‘அப்படிச் செய்யாதே… செய்தால் சினிமா மார்க்கெட் சுத்தமா போயிடும்… இமேஜ் கெட்டுடும்”னு பலர் சொன்னாங்க… இதுதவிர, பல பயமுறுத்தல்கள். முப்பத்திரண்டு வருஷமா சினிமாவிலேயே ஊறித் திளைச்சு, பத்மஸ்ரீ கமலஹாசனா வளர்ந்த பிறகு ‘இமேஜை’ பணயம் வைத்து விவாகரத்துங்கற ஒரு பெரிய ‘ரிஸ்க் எடுத்திருக்கேன்னா, நான் எடுத்த முடிவு சரியா தவறான்னு நீங்களே முடிவு செய்துக்கலாம். அது தவிர்க்க முடியாம போயிடுச்சு. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.”
“சரிகாவிடம் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?!”
“இப்படிச் சொல்லலாம். நாங்க ரெண்டு பேருமே ஒரே தலைமுறை. நாங்க ரெண்டு பேருமே குழந்தை நட்சத்திரமா அறிமுகமானவங்க. எங்க ரெண்டு பேராலேயும் ஒரே அலைவரிசையில் பேசிக்க முடியாது. ரெண்டு பேருமே, Crossword Puzzle போடுறோம். In fact, என்னைவிட அவ வேகமா போடறா. எல்லா கஷ்டங்களையும் சுலபமா எடுத்துக்கிற மனப்பக்குவம் என்னைவிட சரிகாவுக்கு இருக்கு. ஏன்னா, எங்க திருமணத்தில, என்னைவிட சரிகாவுக்குத்தான் நிறைய வேதனைகள். என் பக்கத்திலிருந்துதான் ஏராளமான தொல்லைகள். அதையெல்லாத்தையும் அவ ‘காஷூவலா’ எடுத்துக்கிட்டா. நான் பாக்க விரும்பற படங்களையே அவளும் விரும்பி பார்ப்பா. பல சமயங்கள்ல சைகையிலேயே எங்களுடைய எண்ணத்தைப் பகிர்ந்துக்கற அளவுக்கு Perfect அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. ஒருத்தரையொருத்தர் தொந்தரவு பண்ணாம கட்டில்ல படுத்தபடி பல மணி நேரம் புஸ்தகம் படிக்க முடியுது. மொத்தத்தில் அவளிடம் எந்தவித ஹிப்பாக்கிரஸியும் இல்லை.”
“இன்னமும் நீங்க, நாத்திகர்தானா?”
“கோயிலை இடிக்கணும்னு சொல்ற நாஸ்திகனுமில்லே. எல்லாத்துக்கும் கடவுளை இழுக்கிற ஆஸ்திகனுமில்லே. என்னால பக்தி விஷயத்துல உடன்பட முடியலே. அதுக்காக மத்தவங்க சென்டிமெண்ட்ல நான் தலையிடறதும் இல்லே…”
“உங்க குழந்தையுடைய பர்த் சர்டிபிகேட்ல மதம்கிற இடத்தில ‘Nil’னு போட்டதாகச் சொல்லியிருந்த ஞாபகம்…”
“ஆமாம்! நான் இந்தியன். அவ்வளவுதான், I don’t believe in religion. என் இரண்டாவது மகளுக்கும் அப்படித்தான். எந்தக் காலகட்டத்திலேயும் என் குழந்தைகள் இந்த மதம்தான்னு சொல்லி குடுக்க மாட்டேன்.”
ரசிகர் மன்றங்கள் பற்றிப் பேச்சு திரும்பியது.
“இப்போது என் பெயரில் ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவை நற்பணி இயக்கங்கள்தான். 1973-லிருந்து 1980 வரை நானும் ரசிகர் மன்றங்கள் இல்லாமத்தான் இருந்தேன். ஆனால், நாம வேண்டாம்னாலும் என் ரசிகர்கள் ரிலீஸ் அன்னிக்கு தியேட்டர் வாசல்ல போய், தோரணங்கள் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அவன் சொந்தக் காசைப் போட்டு தியேட்டர்ல கொடி கட்டப் போகும்போது, மற்ற நடிகர்களுடைய மன்றங்களோட மோதல்! நாம அவங்களை அங்கீகரிக்காட்டாலும் கமல் ரசிகர்கள் கலாட்டான்னுதான் பெயர் வரும். அதை ஒழுங்குபடுத்தத்தான் ரசிகர் மன்றங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன். எவ்வளவு Man power வேஸ்டா போகுதுன்னு உணர முடிஞ்சுது. ஆனால், அந்த மன்றங்களும் முதல் நாள் டிக்கெட் பிளாக்ல விக்கற அளவுக்குத்தான் இருந்தது. மேலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல, அதுக்குத் தலைமை தாங்கறவங்க அதை ‘மிஸ்யூஸ்’ பண்ண ஆரம்பிச்சாங்க.
என்னையே பிளாக் மெயில் பண்ற அளவுக்கு வளர்ந்தது. ‘நாங்க கைதட்டி, விசில் அடிக்கலைன்னா உங்க படம் ஓடிடுமா?’ன்னு என்னையே கேக்க ஆரம்பிச்சாங்க. அப்படிப் பார்த்தா என்னுடைய எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டாயிருக்கணுமே! இந்த பிளாக்மெயிலுக்கெல்லாம் பணியக் கூடாதுன்னு மன்றங்களைக் கலைச்சேன். அதே சமயம், அந்த இளைஞர்களுடைய பலத்தைச் சரியா பயன்படுத்த நினைச்சேன். நானே தலைமை ஏற்று, நற்பணி இயக்கங்கள் ஆரம்பிச்சேன். இதுக்கு சினிமா கலர் மட்டும் இருக்கக்கூடாதுன்னு பல அறிஞர்களை எங்கள் விழாவுக்குக் கூப்பிட ஆரம்பிச்சோம். முதல்ல சினிமா ரசிகர்கள் கூட்டம்னா வர்றத்துக்கே தயக்கம் காட்ட ஆரம்பிச்சவங்க, இப்ப எங்களுடைய பணிகளைப் பாத்து புரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சிருக்காங்க. ரத்த தானம், கண் தானமெல்லாம் பண்றோம். இதுவரைக்கும் பதினைந்தாயிரம் பேர் கண்தானம் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலேயும் லைப்ரரி ஆரம்பிக்கப்போறோம்.”
“நீங்கள் செயல்படுத்தும் விதம் ஆக்கபூர்வமா இருக்கலாம். ஆனால், ரசிகர் மன்றங்கள் ஆரோக்கியமான விஷயமா?”
“தமிழ்நாட்டுல அது தவிர்க்க முடியாத விஷயமாயிட்டுது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேருந்து இது தொடருது. அதுவும் இதன் மூலமா எம்.ஜி.ஆர். முதலமைச்சராவே ஆயிட்டார். அதனால ஒவ்வொரு நடிகருக்கும் இந்த மன்றங்கள் கூட்டத்தைப் பார்த்தவுடனே, உள்ளுக்குள்ளே நாமும் கோட்டையில போய் உட்கார மாட்டோமான்னு ஒரு ஆசை இருக்கு. கூட்டத்துக்குப் போனா `வருங்கால முதல்வரே’ன்னாங்க. ‘தலைவரே’ன்னாங்க. அதெல்லாம் பார்த்தபோது, எனக்கேகூட ஆரம்பத்துல ஒரு ஒண்ணரை மாசம் அந்த மயக்கம் இருந்தது உண்மை! அதை எளிதில் தவிர்க்க முடியாது.”
“அப்ப எதிர்காலத்துல இந்த ரசிகர் மன்றங்களுடைய நிலைமை?”
“அதுக்கு முதல்ல, நடிகர்களைப் பார்த்து `தலைவா’ன்னு சொல்றது போகணும். இந்த ‘தலைவா’ கலாசாரம் அரசியல்லேருந்து வந்தது. எம்.ஜி.ஆரை, சிவாஜியை அப்படிச் சொன்னதுக்குக் காரணம் – அவங்களுக்குப் பலத்த அரசியல் பின்னணி இருந்தது. சிவாஜி சார் தி.மு.க-வுக்கு நிதி சேர்க்கத் தெரு முனையில நின்னு ‘பராசக்தி’ வசனம் பேசினாரு. அப்புறம் பகுத்தறிவோட உடன்படாம ஒதுங்கி, திருப்பதிக்குப் போயிட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் தீவிரக் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தாரு. அவங்களை மாதிரியே நாமும் என்று நினைச்சுக்கிட்டிருக்கற Myth போகனும்…”
“இந்த இளைஞர் சக்தியை வைத்துக் கொண்டு நீங்கள் அரசியலில் இறங்கலாமே?”
“நிச்சயமா என்னால முடியாது. ‘அரசியலுக்குப் போனா நான் கொலைகாரனா ஆயிடுவேன்’னு ரஜினி சொன்னது ரொம்பவும் உண்மை. அவர் சொன்னதுக்குக் காரணம் , அவர் Temperament எனக்கும் அதே மனநிலைதான். இறங்கினா ‘மெஷின் கன்’னை எடுத்துக்கிட்டுப் போய், எல்லாரையும் சுடற எண்ணம் வந்தா ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம்! நான் ஒரு False Messiah-வாகத்தான் இருப்பேன். என்னால முடியாது…
அடுத்து என்னுடைய மானேஜரும் கடந்த பத்து வருடங்களாக எனக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் டி.என்.சுப்ரமணியத்துக்கு ஒரு படம் பண்றேன். மலையாளத்தில் ரொம்பப் புகழ் பெற்ற டைரக்டர் சிபிமலயில் படத்தை டைரக்ட் பண்றார். அதுக்கான டிஸ்கஷன் இப்ப நடந்துக்கிட்டிருக்கு எழுத்தாளர் சுஜாதாவும் நானும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கோம். அதுக்கு நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுது. சுஜாதா ரொம்பத் தீவிரமா வொர்க் பண்ணிக்கிட்டிருக்கார், அதே மாதிரி, ‘பொன்னியின் செல்வன்’ உரிமை எங்கிட்டதான் இருக்கு அது நானும் மணிரத்னமும் சேர்ந்து பண்ண வேண்டிய விஷயம்.”
“ஐந்து பாகத் தொடர் ‘பொன்னியின் செல்வன்’ அதைச் சுருக்க முடியுமா?”
“நீங்க நல்லா படிச்சிங்கன்னா, கதைங்கிறது. நானூறு பக்கங்கள்தான். நிறைய வர்ணனைகள் உண்டு. பல பக்க வர்ணனைகளைச் சில அடிகள்ல சினிமாவில விஷுவலா காட்ட முடியும். படம் எடுக்கும் போது சில விஷயங்களைத் தியாகம் பண்றதைத் தவிர்க்க முடியாது. பட், நிச்சயம் பண்ணுவேன். தவிர அது Big Budget படம். அதே சமயம். இந்தியில் டப்’ பண்ணாலும் சரியா வராது. அதுக்கு ஒரு தமாஷான காரணம் உண்டு. நான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் பெரிய ரசிகன். ஸோ, இந்தியிலே ‘மேரா நாம் வந்தியத்தேவன்’ என்று சொல்வதை என்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியலை.” (சிரிப்பு)
“அதே மாதிரி பாரதியார் படம்..?”
“அதுக்கு நிறையவே வொர்க் பண்ணி வெச்சிருக்கேன். ஒளிப்பதிவாளர் ஶ்ரீராம்கூட எப்ப பார்த்தாலும் ‘பாரதியார் படம் பண்ணலாமே’ம்பார். ஆனா, ஏற்கனவே ஒரு பேட்டியில நான் சொன்ன மாதிரி நாயகர்களை – தலைவர்களை நான் மனிதர்களாத்தான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் கடவுள்கள் இல்லை. அவர்களுக்கும் பலவீனங்கள் உண்டு – அதில் எந்த காம்ப்ரமைஸூம் பண்ணமாட்டேன். பாரதின்னு எடுத்துக்கிட்டா. அவருக்குன்னு சில Eccentricities உண்டு. அதை அப்படியே காட்டணும்… அதை எவ்வளவு தூரத்துக்கு ஜீரணிப்பாங்கன்னு தெரியலை.”
“வாழ்க்கையில் நீங்க பட்ட மறக்க முடியாத அவமானங்கள் உண்டா? அதாவது Mental Trauma?”
“அடிப்படையிலேயே எனக்கு ஞாபகமறதி அதிகம். எனக்குப் பெரிய துரோகம் செஞ்சிருந்தாக்கூட, என்னால ரொம்ப நாள் ஞாபகம் வெச்சிருக்க முடியாது. எல்லார்கிட்டேயும் சகஜமா பேசுவேன். அப்புறம்தான் பக்கத்திலிருக்கிறவங்க கூப்பிட்டு, எனக்கு அந்த நபர் பண்ணின துரோகத்தை நினைவுபடுத்துவாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு பெரிய அவமானம்னா ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு பையன் என் முகத்துல குத்தினான். முன் பல் சிதறிப் போச்சு. அதுவும் பலர் எதிர்ல நடந்தது. அதுதான் என்னால மறக்க முடியாத பெரிய அவமானம்னு சொல்லுவேன்…”
“கமல், நீங்க சின்னக் குழந்தையா இருக்கும்போதே சினிமாவுக்கு வந்துட்டீங்க. குழந்தைங்க சினிமாவுக்கு வந்தா, குழந்தைப் பருவத்துக்கே உண்டான வெகுளித்தனம் காணாமப் போய், ஒருவித வக்ரம் வந்துடுதே… உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கணுமே..?”
“அது உண்மைதான்… எனக்கும் அது நிகழ்ந்திருக்க வேண்டியது. ஆனா, பொதுவா மத்த குழந்தை நட்சத்திரங்களுக்கு இருந்த புத்திசாலித்தனம் எனக்கு அப்பக் கிடையாது. நான் கொஞ்சம் மக்கு! என் மழலை மட்டும்தான் பயன்பட்டது. என் புத்திசாலித்தனம் பயன்படவேயில்லை!”
“நீங்க சொல்றது உண்மையா?”
‘நிச்சயமா… கிளிப்பிள்ளை மாதிரி சொல்ற டயலாக்கை அப்படியே திருப்பிச் சொல்லுவேன் அவ்வளவுதான்… அதுக்கு உதாரணம்கூட உண்டு. ஏவி.எம். படத்துல நடிக்கும்போது ஜாவர் சீதா ராமன்தான் வசனம் சொல்லிக் கொடுப்பார் அவர் வெத்திலை, பாக்கு போட்டுக்கிட்டு வசனம் சொல்லிக் கொடுத்தா, அவரை மாதிரியே வாயைக் குதப்பிக்கிட்டே பேசுவேன். அதனாலயே வெத்திலை போடாம டயலாக் சொல்லிக் கொடுப்பார். சின்ன வயசுல பெரிய பேச்செல்லாம் பேசற குழந்தைகளுக்கு Child Manners போயிடும். ஆனா நான் புத்திசாலி இல்லேங்கறதனால, அந்தக் குழந்தை நட்சத்திரம்ங்கிற முத்திரையே இல்லாமப் போயிட்டுது. நான் குச்சி மாதிரி முட்டைக் கண்ணை வெச்சுக்கிட்டு இருப்பேன். புத்தியும் இல்லாம, குழந்தை நட்சத்திரத்துக்குண்டான போஷாக்கும் இல்லாதவன் நான். படிப்பு ஏறாது. கணக்கே வராது. தப்பா கணக்குப் போட்டா வாத்தியார் ‘ஏண்டா, சினிமாவிலே நடிச்சுட்டா பெரிய ஆளா நீ? எழுந்து பெஞ்சு மேலே நில்லு’ என்பார். எங்கு திரும்பினாலும் தலையில் குட்டுகள்! இதெல்லாம் சேர்ந்து ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திடுச்சு. அதுக்கப்புறம் வயசான பிறகு படங்கள் இல்லை. அதனால அந்தக் குழந்தை நட்சத்திரம்கிற இமேஜே அடிபட்டு போயிடுச்சு.”
“அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரே ஒரு ஸீன்ல வந்தார் ரஜினி… அதுக்குப் பிறகு அவர் உங்களைத் தாண்டி சூப்பர் ஸ்டார் ஸ்டேட்டஸுக்குப் போயிட்டார்ங்கிற பாதிப்பு உங்களுக்கு உண்டா?”
“நிச்சயமா கிடையாது. பல விஷயங்கள்ல பாத்தீங்கன்னா, எங்களுக்குள்ள பெரிய வேறுபாடு இருக்காது. அவர் ஆடியன்ஸ் வேற, என் ஆடியன்ஸ் வேற…”
“பாதிப்பு இல்லேன்னா, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால உங்களுக்குள்ள ஏற்பட்ட நேரடி மோதல் பற்றி..?”
“அது இளமை வேகத்துல ஏற்பட்ட ஒரு மறக்க வேண்டிய, நாங்க ரெண்டு பேருமே மறந்துபோன துரதிர்ஷ்டமான சம்பவம். இப்ப நாங்க மிக நல்ல நண்பர்கள். பல விஷயங்கள்ல இப்ப நாங்க ரெண்டு பேருமே கலந்து பேசிக்கறது கூட உண்டு.”
“உதாரணமா ஒண்ணே ஒண்ணு..?”
‘உங்களுக்கு அதுல ஒண்ணும் விஷயம் இல்லே…’ (கண்ணைச் சிமிட்டி விட்டு கமல் ஸ்டைலில் வாய்விட்டுச் சிரித்தார் கமல்).
எழுந்து நின்று வாசலுக்கு நகர்ந்தபோது கேட்ட இரண்டு கேள்விகள்.
“கமல், ஒருவிதத்தில் நீங்க ரொம்ப லக்கி. நிதானமாக, ஸ்லோமோஷனில் உங்களுக்கு வயசாகிக்கிட்டு இருக்கு. அதுவுமில்லாம அண்மைக் காலமா உங்க முகத்தில ஸாஃப்ட்னெஸ் குறைஞ்சு, முரட்டுத்தனம் தெரிகிறது. இதை நீங்க உணர்றீங்களா..?”
“முன்னேயெல்லாம் ரொம்ப அழகா தோற்றமளிக்கணும்கிற எச்சரிக்கை உணர்வு நிறைய இருந்ததால் மெனக்கெட்டு முகத்தை ஸாஃப்டாக வைத்துக் கொள்வேன். தவிர, நினைக்கும்போதெல்லாம் கண்ணாடி முன்நின்று அழகு பார்த்துக் கொள்வேன்.
அந்த Narcissism ஏற்படுத்திய பாதிப்பு எனக்குள்ளேயே புகுந்து விட்டது. இப்போ அதைப் பற்றிய கவலையெல்லாம் எனக்கு இல்லை. பெண்களைப் போல அழகு பார்த்துக் கொள்ளுகிற அந்த habit என்னைவிட்டு அகன்று போனவுடனேயே முகத்தில் சற்று முரட்டுத்தனம் வந்திருக்கலாம்.”
“நீங்கள் நிறைய படிக்கிறீர்கள்… ஆகவே இந்தக் கேள்வி… யாருமில்லாத தீவில் ஒரு மாதம் கழிக்க வேண்டுமென்றால், உங்களுடன் என்ன புத்தகங்கள் எடுத்துச் செல்வீர்கள்?”
“மார்க்ஸின் Das Kapital புத்தகம் வாங்கிப் பல வருஷங்கள் ஆகின்றன. தீவிலேயாவது படிக்கலாமென்று எடுத்துச் செல்வேன். (சற்று யோசித்து விட்டு) சரி, விடுங்க சார்… வீடியோ வந்துவிட்டது, எதற்கு புத்தகங்கள்? ஒரு கலர் டி.வி, வி.ஸி.ஆர். சென்னையிலிருந்து அதற்கு ஒரு ஸ்பெஷல் கலெக்ஷன். கோணி நிறைய காஸெட்டுகள். சில நாட்களில் அத்தனையும் பார்த்து முடிச்சுடுவேன். ஸோ… ஒருவர் படகில் தொடர்ந்து காஸெட் கொண்டுவந்தால் போதும்.”
பேட்டியை முடித்துவிட்டு ஹாலில் இருந்து வெளியே வரும்போது உத்தேசமாக வாட்ச்சைப் பார்த்தோம்.
6 மணி நேரம், பதினேழரை நிமிடங்கள் முடிந்திருந்தன. அங்கேயிருந்து படியிறங்கிக் கீழே மெயின் கேட்டுக்கு வர எடுத்துக்கொண்ட ஆறு விநாடிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்!
– விகடன் டீம்
புகைப்படங்கள் : பிரவீண்குமார்