சென்னை: தனது உயர்கல்வி தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார். சுமார் 2வாரம் அவர் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இரண்டு வார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அமெரிக்க பயணத்தில், அங்குள்ள தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறிய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்பு, மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வோருக்கும் தூதரக ரீதியிலான உதவிகள் மேலும் அதிகமாவதற்கான வாய்ப்பு போன்றவை குறித்து ஆலோசனை செய்வதுடன், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 12ஆம் தேதி அண்ணாமலை தாயகம் திரும்புகிறார்.
அண்ணாமலை ஏற்கனவே இலங்கை சென்று, அங்குள்ள தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருந்தார். அதைத்தொடர்ந்து, இலங்கையில், பொருளாதார நெருக்கடி முற்றிய சூழலில், அங்குள்ள தமிழர்கள் உட்பட இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு பெருவாரியாக வழங்கியது.