கடைவரம்பில் கருகிய நெற்பயிர்களை காப்பாற்ற அறுவடை வரை தண்ணீர் விட குமரி விவசாயிகள் கோரிக்கை: வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதியில் தண்ணீர் இல்லாததால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு உள்ளனர். அவர்களிடம் அறுவடை முடியும் வரை தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. மேலும் இருபருவமழையும் கைகொடுப்பதால், மாவட்டத்தில் உள்ள குளங்களில் தண்ணீரை சேமித்து வைத்தும், விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கன்னிப்பூ, கும்பபூ என்று மாவட்டத்தில் 2 சாகுபடிகள் நடந்து வருகிறது. தற்போது கன்னிப்பூ அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. குளத்து பாசன வசதிபெரும், பறக்கை, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் அறுவடை தொடங்கியது. தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் அனந்தனார்சானலின் கடைவரம்பான தெங்கம்புதூர் பகுதியிலும், தோவாளை சானல் முடியும் கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த பகுதி வயல்களுக்கு அறுவடை முடியும் வரை தண்ணீர் விடவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தற்போது தண்ணீர் வராததால், கதிர்வந்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கடைவரம்பு பகுதியில் உள்ள நெற்பயிர்கள் அறுவடை முடியும் வரை கடைவரம்புக்கு தண்ணீர் விடவேண்டும் என்று கடைவரம்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து விவசாயி பெரிய நாடார் கூறியதாவது: வருடம் தோறும் கடைவரம்பு பகுதிகளில் நெல்சாகுபடி பணிகள் தாமதமாக நடக்கும். இந்த வருடம் கன்னிப் பூ சாகுபடி மாவட்டத்தில் தொடங்கிய சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தான் தெங்கம்புதூர் சானல் கடைவரம்பு பகுதியில் சாகுபடி தொடங்கியது. குளத்து பாசன வசதி பெறும் வயல்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முதலில் தொடங்கியது.

தற்போது ஆற்றுபாசன வசதி பெறும் வயல்களில் அறுவடை நடந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட வயல்கள் அறுவடை முடிந்துள்ளது. தெங்கம்புதூர் கடை வரம்பு பகுதிகளில் உள்ள வயல்கள் இன்னும் 5 நாட்களில் இருந்து 8 நாட்களில் அறுவடை தொடங்கும். ஆனால் கடைவரம்பு பகுதியான குளத்துவிளை, தெங்கம்புதூர், புல்லுவிளை பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 5 நாட்களாக தண்ணீர் இல்லாததால், இந்த பகுதியில் உள்ள வயல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் வேளாண்மை அதிகாரிகள் நேற்று தெங்கம்புதூர் கடைவரம்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அறுவடை முடியும் வரை தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.