`காரே ரூ.11 லட்சம்தான், சர்வீஸுக்கு ரூ.22 லட்சமா!' – புலம்பிய கார் உரிமையாளர்; என்ன நடந்தது?

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவின் பல பகுதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத கனமழையால், வெள்ளத்தில் மூழ்கின. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்திருப்பதையடுத்து, பெங்களூரு நகரம் முழுவதும் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பிவருகிறது. அதே வேளையில், வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களைப் பழுதுபார்க்க, சர்வீஸ் சென்டர்களை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

பெங்களூரு

அந்த வரிசையில், பெங்களூரூவைச் சேர்ந்த அனிருத் என்பவர், சர்வீஸ் சென்டரில் விடப்பட்ட தன்னுடைய காருக்கான செலவுத்தொகை குறித்து சமூக வலைதளத்தில் புலம்பியிருக்கும் சம்பவம் வைரலாகி வருகிறது. அப்படியென்னதான் புலம்பல் என்று பார்த்தால், சர்வீஸுக்கு விடப்பட்ட காரின் மொத்த விலையே ரூ.11 லட்சம் தானாம். ஆனால், காரை ரிப்பேர் செய்ய ரூ.22 லட்சம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

வெள்ளத்தில் மூழ்கிய கார்

இந்தச் சம்பவத்தை அனிருத் LinkedIn வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதன்படி அனிருத், வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த தன்னுடைய வோக்ஸ்வாகன் போலோ டி.எஸ்.ஐ காரை, பெங்களூருவின் வைட்ஃபீல்டில் உள்ள வோக்ஸ்வாகன் ஆப்பிள் ஆட்டோ சர்வீஸ் சென்டரில் பழுதுபார்க்க விட்டிருக்கிறார். 20 நாள்களுக்குப் பிறகு சர்வீஸ் சென்டரிலிருந்து, `தங்களின் கார் முழுவதுமாக சேதமாகிவிட்டது, சரிசெய்ய ரூ.22 லட்சம் செலவாகும்’ என்று அனிருத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனைக்கேட்ட அனிருத், `காரோட மொத்த விலையே ரூ.11 லட்சம்தான். இதுல சர்வீஸுக்கு ரூ.22 லட்சமா’ என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

அனிருத்தின் LinkedIn பதிவு

பின்னர் அனிருத், இன்சூரன்ஸ் க்ளைம் செய்யலாம் என்று, தான் இன்சூரன்ஸ் பதிவுசெய்திருந்த அக்கோ(Acko) இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டிருக்கிறார். இன்சூரன்ஸ் நிறுவனமோ, காரை மொத்த நஷ்டமாக எழுதிக்கொள்ளப்படும் என்றும், ரூ.6 லட்சம் காருக்கு காப்பீடு வழங்க முடியும் என்றும் கூறியிருக்கின்றனர். அதையடுத்து அனிருத்தும் காரை மட்டும் கொண்டுவந்திடலாம் என்பதற்காக, எஸ்டிமேஷன் பில் கேட்டு கார் ஷோரூமுக்குச் சென்றபோது அங்கும் ஒரு அதிர்ச்சி.

பில்

அதுஎன்னவென்றால், பொதுவாகவே ஷோரூம்களில் எஸ்டிமேஷன் பில் அதிகபட்ச வரம்பே ரூ.5,000-தான் என்று கூறப்படுகிறது. ஆனால், அனிருத்துக்கு ரூ.44,840 பில் வந்திருக்கிறது. பின்னர் இது குறித்து வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு மெயில் அனுப்பியிருக்கிறார் அனிருத். ஆனால், எந்தவொரு பதிலும் வராததால், அனிருத் இதனை LinkedIn-ல் பதிவிட்டிருக்கிறார். பிறகு இதன்மூலம் இந்த விவகாரம் நேரடியாக வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்குத் தெரியவர, அவர்கள் தற்போது ரூ.5,000 மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.