ராஜஸ்தான் மாநில முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்தால், அசோக் கெலாட்டின் ஆதரவு 90 எம்.எல்.ஏகள் ராஜினமா செய்வோம் என அறிவித்தனர். இதனை தொடர்ந்து, காங்கிரஸுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கவே அசோக் கெலாட்டின் மீது சோனியா காந்தி அதிருப்தியிலிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அசோக் கெலாட்டின் தற்போது அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ம் தேதிக்குள் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் உட்பட கேரளாவைச் சேர்ந்த சசி தரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் முனைப்புக்காட்டி வந்தனர். இறுதியாக சசி தரூர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். மறுபக்கம், தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால், ராஜஸ்தானில் முதல்வராக அவர் நீடிக்கக் கூடாது என்று சச்சின் பைலட்டும் அழுத்தம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தியை சந்தித்த பிறகு, ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவது இல்லை’ என்ற தகவலை அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், ‘ நான் கொச்சியில் ராகுல் காந்தியைச் சந்தித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுமாறு கூறினேன். அவர் ஏற்காததால், நான் போட்டியிடுவேன் என்று கூறினேன் ஆனால் நான் இப்போது தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என்றார். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் முதலமைச்சராக நீங்கள் நீடிப்பீர்களா? என்று கேள்விக்கு, ‘’இது பற்றி சோனியா காந்தி முடிவு செய்வார்’ என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM