டேராடூன் :உத்தரகண்ட் விடுதியில் பணியாற்றி வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை, விரைவு நீதிமன்றம் வாயிலாக விரைவாக விசாரிக்க அந்த மாநில முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வற்புறுத்தல்
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டம் ரிஷிகேஷ் அருகே யாம்கேஷ்வர் என்ற இடத்தில், பா.ஜ.,விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா சொகுசு விடுதி நடத்தி வந்தார்.இந்த விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, 19, என்ற இளம் பெண்ணின் உடல், அருகில் உள்ள கால்வாயில் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்டது. விடுதியில் தங்கும் விருந்தினர்களுடன் உல்லாசமாக இருக்க, அங்கிதாவை வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் அவரை புல்கித் ஆர்யா கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
சமூக வலைதளம்
இது குறித்து விசாரித்த போலீசார், புல்கித் ஆர்யா, விடுதி நிர்வாகிகள் அங்கித், சவுரப் என மூன்று பேரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, அங்கிதாவின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்தப் பிரச்னை குறித்து பலர் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதையடுத்து, தேசிய அளவில் இந்த சம்பவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் வாயிலாக விரைவாக விசாரிக்க, முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று உத்தரவிட்டுள்ளார். அங்கிதாவின் குடும்பத்தாருக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement