ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததற்கு எதிராக, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. இப்படியான சூழலில் மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளான ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தன்று, சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய சூழலில் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM