மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் இக்பால் ஷேக் (36). டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இக்பால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த தன்னுடைய மனைவி ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றியுள்ளார். அதோடு இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியிடம் பர்தா அணியுமாறு கட்டாய படுத்தியுள்ளனர். இதற்கு ரூபாலி மறுப்பு தெரிவித்ததால் ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ரூபாலி தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி இக்பால் ரூபாலியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக ரூபாலியை சந்தித்து மகன் யாருடன் இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக சென்றுள்ளார். அப்போது இக்பாலுக்கும் ரூபாலிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இக்பால் தன்னுடைய மனைவியை ஒரு சந்துக்குள் அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இக்பாலை கைது செய்துள்ளனர்.
பர்தா அணியாத காரணத்திற்காக தன்னுடைய மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.