மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகை ஷோபிதா கூறுகையில், “இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெரிய பெருமை. சரித்திர கால உடைகள் அணிந்து நடித்தது, நடனமாடியது எல்லாம் எப்போதும் நீங்க நினைவுகளாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.
நடிகை த்ரிஷா பேசுகையில், “இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி சென்னையிலேயே முடித்திருக்கிறோம். பொதுவாக ஒரு பட வெளியீட்டுக்கு முன்பு எந்த டென்ஷனும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் எனக்கு சின்ன டென்ஷன் இருக்கிறது. கூடவே நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு ப்ரமோஷன் செய்ததில்லை. படத்தை பற்றி இவ்வளவு பேசியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதெல்லாம் நடந்திருக்கிறது. நாளை உங்களைப் போலவே நாங்களும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, “ ‘நானே வருவேன்’ என அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்தேன். முதலில் இந்த நிகழ்வுக்கு வரும்படி அழைத்த போது தஞ்சாவூர் செல்லும் வேலை இருந்ததால் முடியாது எனச் சொன்னேன். ஆனால் பின்பு கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதனால் அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இப்படியான பிரமாதமான மேடையை எங்காவது பார்க்க முடியுமா?
கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு மேல் இந்த ஆராவாரம் இருக்கும் என நம்பலாம். ஏனென்றால் இந்த அளவுக்கு எந்தப் படத்திற்கும் டிக்கெட் டிமாண்ட் இருந்ததில்லை. இப்படிப்பட்ட படத்தில் எனக்கும் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. மற்றபடி நாளை தஞ்சாவூர் கிளம்புகிறேன். அங்கு சென்று ‘பொன்னியின் செல்வன்’ பார்க்கப் போகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.