டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த அசோக் கெலாட், போட்டியிடவில்லை என்று தெரிவித் துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார். அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு ஒருவருக்கு மேல் தலைவர் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையடுத்து, வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. (மனுத்தாக்கல் நேரம் காலை 11மணி முதல் பிற்பகல் 3மணி வரை). வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்றும், மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 8-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட காந்தி குடும்பத்தினர் மறுத்து விட்ட நிலையில், அசோக் கெலாட், சசிதரூர் உள்பட பலர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், கெலாட்டும், சசிதரூர் ஆகிய இருவர் மட்டுமே வேட்புமனுவை வாங்கினர். இதில், அசோக் கெலாட் இன்று தேர்தலில் போட்டியிடவில்லை என்று மறுத்து விட்ட நிலையில், சசிதரூர் மனுத்தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார். அவர் இன்று வேட்புமனு வாங்கியுள்ளார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற திக்விஜய் சிங் போட்டியிட உள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.