சென்னை: “மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால், அது இந்த நாட்டின் பாதுகாப்புக்குக் கேடாகவே முடியும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் ஒன்றிய பாஜக அரசு தடை செய்திருப்பது இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதற்கு சான்றாக உள்ளது. சனாதனப் பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யாமல் இந்தியாவில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
பயங்கரவாதம் என்பதற்கு அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் சனாதனப் பயங்கரவாதத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சனாதனப் பயங்கரவாதத்தின் காரணமாகவே இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான பொது சொத்துகள் நாசம் அடைந்திருக்கின்றன. பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நாடெங்கும் சனாதனப் பயங்கரவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறைக் கும்பல்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவது இயல்பானதாக மாறிவிட்டது. ஒன்றிய அரசை ஆட்சி செய்பவர்களின் ஆதரவோடு இந்த கும்பல்கள் படுகொலைகளைச் செய்வதைப் பார்க்கிறோம். அவை அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பாகும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர ஊழியராக செயல்பட்டுவந்த யஷ்வந்த் ஷிண்டே என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டேட் நீதிமன்றத்தில் ஆகஸ்ட், 2022-இல் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தில், தான் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் சேர்ந்து நடத்திய கூட்டங்கள் பலவற்றில் பங்கேற்றதாகவும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அந்தக் கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலாக தற்போது இருக்கின்ற மிலிந்த் பராந்தே என்பவரும் அந்தப் பயிற்சியில் பங்கேற்றதாகவும் அவர் தனக்கு குண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததாகவும் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண வாக்கு மூலத்தையும், அந்த வழக்கில் சாட்சியாக தன்னை சேர்க்க வேண்டும் என்ற யஷ்வந்த் ஷிண்டேவின் மனுவையும் ஏற்கக் கூடாது என சிபிஐ வாதிட்டு இருக்கிறது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் முதலான அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களைப் பாதுகாக்கிறார்கள் என்பது இதன்மூலம் வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
2006-ஆம் ஆண்டு நாண்டேட் என்கிற இடத்தில் குண்டு தயாரிக்கும்போது பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்த நரேஷ் கொண்ட்வார், ஹுமன்ஷு பான்சே ஆகியோர் கொல்லப்பட்டனர். 2008-ஆம் ஆண்டு தானேவில் ‘கட்கரி ரங்காயத்தன் தியேட்டரில்’ குண்டு வைத்ததற்காக இந்து ஜன ஜாக்ருதி சமிதி அமைப்பைச் சார்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். பஜ்ரங் தள் அமைப்போடு தொடர்புடைய ராஜிவ் மிஸ்ரா, உப்பிந்தர் சிங் ஆகிய இருவரும் கான்பூரில் குண்டு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்து யுவ வாகினி, இந்து ஜன ஜாக்ருதி சமிதி, ஸ்ரீராம் சேனா முதலான பயங்கரவாத அமைப்புகள் ஏராளமான வன்முறை செயல்களில் ஈடுபட்டிருப்பது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
கௌரி லங்கேஷ், கால்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த பன்சாரே ஆகிய நான்கு பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின்கீழ் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஆனால், அந்த அமைப்பு இதுவரை தடை செய்யப்படவில்லை.
மத ரீதியாக பாரபட்சம் பார்த்து பயங்கரவாதத்தை அணுகினால், அது இந்த நாட்டின் பாதுகாப்புக்குக் கேடாகவே முடியும். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு உண்மையிலேயே விரும்பினால் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன பயங்கரவாத இயக்கங்களை உடனே தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.