அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடக்கின்றனர்; மனித கழிவை மனிதனே அகற்றினால் கலெக்டர், ஆணையர்கள் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

மதுரை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, இந்நிலை தொடர்ந்தால் கலெக்டர், மாநகராட்சி ஆணையர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனிதக் கழிவுகளை அகற்றுவது, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது, கழிவுநீரை அகற்றுதல், குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் மேற்கொள்ளும் நிலை உள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின் போது, பணியாளர்கள் பலர் உயிரிழந்ததால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும், பல மாவட்டங்களில் இந்த நிலை தொடர்கிறது. இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களை மட்டும் ஈடுபடுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் மூலமே கழிவுகள் அகற்றப்படுகிறது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘மனுதாரர் தரப்பில் பல்வேறு புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனாலும் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் நடந்து கொள்கிறார்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். நீதிமன்றங்களின் உத்தரவையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர். பின்னர், ‘‘மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் உண்மையென தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் தவறாக இருந்தால் மனுதாரருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.