சானிட்டரி நாப்கின் விவகாரம்: தமிழ்நாடு அதிலும் முன்னோடிதான்!

“ஆணுறைகளையும் கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் போல?” இது சாமானியர் ஒருவர் பேசியது கிடையாது. ஐஏஎஸ் படித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கூறியது. அதுவும், பள்ளி மாணவி ஒருவர் குறைந்த விலை நாப்கின்கள் பற்றிய கேள்விக்குதன் அவர் இப்படி பதிலளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ‘அதிகாரம் பெற்ற மகள்கள்; வளமான பீகார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுருடன் கலந்துரையாடினர்.

அப்போது பேசிய மாணவி ஒருவர், “அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30இல் சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஹர்ஜோத் கவுர், “இன்று நாப்கின் கேட்பீர்கள். நாளைக்கு ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள். அதன்பிறகு, ஏன் நீங்கள் ஷூக்களை தரக்கூடாது என்பீர்கள். கடைசியாக, குடும்ப கட்டுப்பாடு முறைகளையும், ஏன் ஆணுறைகளையும் கூட அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்.” என்றார். ஆனாலும், அந்த மாணவி அவரை விடவில்லை. ‘அரசைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பது மக்கள் தானே. அவர்களின் வாக்குகள்தானே அரசை உருவாக்குகின்றன.’ என்று பதிலடி கொடுத்தார்.

நாப்கின்கள் தொடர்பான கேள்விக்கு பெண் ஐஏஸ் அதிகாரி அளித்த இத்தகைய அநாகரிக பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வரும் நிலையில், சானிட்டரி நாப்கின் விவகாரத்திலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

பீகாரில் மாணவி ஒருவர் ரூ.20 அல்லது ரூ.30க்கு சானிட்டரி நாப்கின் தரமுடியுமா என்று அரசை பார்த்து கேட்கும் நிலையில் உள்ளார். ஆனால், தமிழகத்தில் அரசு சார்பில் வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இந்நிகழ்வானது பெண்களுக்கு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த காலகட்டத்தில் பெண்கள் தன் சுத்தத்தை ஊக்குவிக்க வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மன நலக் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.60.58 கோடி அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், ஏறத்தாழ 6 கோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த திட்டத்தை நகர்ப்புற பள்ளி மாணவியர்களுக்கும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், சானிடரி நாப்கின்கள் மீது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா கடுமையாக குரல் கொடுத்தார். அதன் பயணாக, பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.