ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை விதித்தது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன் ஆவேசம்

கோவை: உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே தமிழகத்தில், விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டும் நடைபெற்றது. அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை. நாட்டில் எந்த மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடை இல்லை. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது எந்த விதத்திலும் நியாயமல்ல.

இதுபோன்ற இடையூறுகள் மூலம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என யாராவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை, திமுக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.