குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார் – சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம்

சூரத்: குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம் (ட்ரீம் சிட்டி) தொடங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சூரத் நகரில் லிம்பயத் என்ற இடத்தில் நடந்த பிரதமரின் கார் பவனி நிகழ்ச்சியைக்காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அதன்பின், அங்கு ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். வைர வியாபாரத்தில் உலகின் சிறந்த இடமாக சூரத் நகரை மாற்றும் வகையில் பாதுகாப்பு உட்பட பல சிறப்பு அம்சங்களுடன் ட்ரீம் சிட்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் புபேந்திர படேல், ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜோர்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைர தொழில்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. சூரத் நகரின் ஆயத்த ஆடைகளுக்கு, காசி மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய சந்தை உள்ளது. சூரத் ஜவுளி வியாபாரிகளின் வசதிக்காக சூரத்திலிருந்து காசிக்கு புதிய ரயிலை இயக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

உலகளவில் வேகமாக வளரும் நகரங்களில் சூரத் நகரமும் ஒன்று. இங்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் உள்ளதால், வரும் நாட்களில் சூரத் நகரும் வேகமாக வளர்ச்சி பெறும். சூரத் நகரில் ஏழைகளுக்காக சுமார் 80,000 வீடுகளை அரசு கட்டியுள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 4 கோடி ஏழை மக்கள், இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். இவர் களில் 32 லட்சம் பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சூரத் நகரில் 1.25 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சூரத் நகரில் மிகுந்த ஆவலுடன் கொண்டுவரப்படும் ‘ட்ரீம் சிட்டி’ திட்டம் நிறைவடையும்போது, வைர வியாபாரத்துக்கு உலகளவில் மிகச் சிறந்த இடமாகவும், பாதுகாப்பு மிக்க நகரமாகவும் சூரத் மாறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாவ்நகரில் ரூ.5,200 கோடி திட்டம்

சூரத் பயணத்தை முடித்துக் கொண்டு, பாவ்நகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கும் காரில் பயணம் செய்தபடி மக்களை சந்தித்தார். அதன்பின், அங்கு ரூ.5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பாவ்நகர் துறைமுகம் அருகே உலகின் முதல் இயற்கை எரிவாயு முனையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இது அரசு மற்றும் தனியார் துறை மூலம் ரூ.4,000 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. குஜராத் பாவ்நகர் துறைமுகம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் சரக்குகளை கையாள்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் மோடேரா பகுதி யில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 36-வது தேசிய விளையாட்டுகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். அதன்பின், ஜிஎம்டிசி மைதானத்தில் குஜராத் அரசு சார்பில் நடத்தப்பட்ட நவராத்தி விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.