விவகாரத்து வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?

விவகாரத்துக்குப் பின்னர் குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை தொடர்பாக விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனக் கூறி, குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் வழங்கு உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அரியானா மாநிலம் குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்து, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரியானா மாநிலத்தின் குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது எனவும், குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனி நீதிபதி போதனை செய்ய முடியாது எனவும் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி, தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டி தகவல் தெரிவித்து, அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் சென்று சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.