ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் திரைப்படமான `பொன்னியின் செல்வன்’ இன்று (30-9-2022) வெளியாகியிருக்கிறது. கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்..
அந்த நாவலில் வரும் பொன்னியின் செல்வன் `அருள்மொழி வர்மன்’ தான், உலகமே வியந்து போற்றும் ராஜராஜசோழன்! சோழ மக்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தவர்; மிகச்சிறந்த வீரன். 19 வயதிலயே சோழப்பேரரசின் தளபதியாக விளங்கியவர்.
அருள்மொழி வர்மன், பல தடைகளைத் தாண்டித்தான் அரியணை ஏறினார். இன்றும் மக்கள் போற்றும் ராஜராஜசோழனாக திகழ்வதற்கு அவரின் சிறந்த குணமும் மக்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கையுமே காரணம்.
இந்நிலையில், சிறப்பு வாய்ந்த அருள்மொழி வர்மன் பெயரைத் தாங்கியபடி கேட்டரிங் தொழிலில் கலக்கும் சென்னையைச் சேர்ந்த அருள்மொழி வர்மன் என்பவரிடம் பேசினோம்…
உங்களை பற்றி….?
என்னுடைய பெயர் அருள்மொழி வர்மன். சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம். தற்போது சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் கேன்டீன் நடத்துகிறேன் .
`பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்துள்ளீர்களா? அந்த நாவலில் வரும் அருள்மொழி வர்மனின் சிறப்பு பற்றி தெரியுமா?
நான் பொன்னியின் செல்வனை நாவலாகப் படித்ததில்லை. ஆனால் கதையாகக் கேட்டிருக்கிறேன். எனக்கு இந்தப் பெயரின் அருமை பெருமைகள் முதலில் தெரியவில்லை. என் இளமைப் பருவத்தில், மும்பையைச் சேர்ந்த ஒரு கஸ்டம்ஸ் ஆபீசரை சந்திக்க நேர்ந்தது. நான் அவருடன் இருந்த நாள்களில், என் பெயரை திரும்பத் திரும்ப சொல்ல வைத்துக் கேட்பார். இந்தப் பெயரின் பெருமை தெரியுமா என்று ஒருமுறை கேட்டார். தெரியாது என்றேன். அப்போதுதான் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அருள்மொழி வர்மன் பற்றி கூறினார்.
உங்கள் இளமைக்காலத்தில் அருள்மொழி வர்மன் என்ற பெயர் உங்களுக்குத் தனித்துவமாகத் தோன்றியிருக்கிறதா? ஏன் இந்தப் பெயர் வைத்தார்கள் என்று கேட்டுள்ளீர்களா?
மும்பையைச் சேர்ந்த அந்த கஸ்டம்ஸ் ஆபீசர் பொன்னியின் செல்வன் பற்றி சொன்ன பிறகுதான் என் வீட்டில் கேட்டேன். அப்போதுதான், என் தாத்தா மியான்மரில் தமிழ் சங்கத் தலைவராக இருந்தார் என்றும் அவரின் இயற்பெயரும் அருள்மொழி வர்மன் என்பதும் தெரிந்தது. அவர் நினைவாகத் தான் எனக்கும் அந்தப் பெயர் வைத்ததாகச் சொன்னார்கள்.
அருள்மொழிவர்மன் சிற்பக்கலை, இசைக்கலைகளில் அதிக நாட்டமுடையவர். தஞ்சை பெரிய கோயில் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. உங்களுக்கு அப்படி ஏதேனும் கலைகளில் விருப்பமுள்ளதா?
ஆமாம், எனக்கு இசை பிடிக்கும். ஆனால், என் குடும்பச்சூழல் காரணமாக இசை கற்க முடியவில்லை. ஆனால், இசையை விரும்பிக் கேட்பேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தால் முறையாக இசையைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு அமைந்திருக்குமோ என்றும் யோசித்திருக்கிறேன். எனக்கு சமையல்கலை மிகவும் பிடிக்கும். அதனால் தான் கேட்டரிங் செய்கிறேன். சமையலும் ஒரு கலைதானே!
பொன்னியின் செல்வன் நாவலில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம்?
பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மன் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல. அவர்தான் எல்லாமே! எனக்கு பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் வந்தியத்தேவன். அவர் தான் நகைச்சுவை, காதல், வீரம் என்று ஆகச் சிறந்தவர்! “