சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: எப்போது நிறைவடையும் தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புக்குள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையின் அத்தனை தெருக்கள், சாலைகளிலும் மழை நீர் வடிகால்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. சில இடங்களில் மிக விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இன்னும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பல இடங்களில் இப்போது தான் குழியை வெட்டி பணியை தொடங்குகின்றனர்.

சென்னையில் சில இடங்களில் மழை பெய்து வருவதால் அதில் தண்ணீர் தேங்கியும் வருகின்றன.

இந்நிலையில் சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீா் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயா் பிரியா கூறியுள்ளார்.

முன்னாள் மேயா் சிவராஜின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை, திருவுருவ படத்துக்கு அரசு சாா்பில் அமைச்சா் சேகா்பாபு, மேயா் பிரியா ராஜன், துணை மேயா் மகேஷ்குமாா் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மேயா் பிரியா , “மழைநீா் வடிகால் பொருத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம்.

சிங்கார சென்னையைப் பொருத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாவது பகுதியில் 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பதிக்கப்பட்டதோ, அந்த இடங்களைத் தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.

அதுவும் அக்டோபா் 10ஆம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழைநீா்த் தேங்கும் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேயர் கூறியபடி அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம், ஆனால் அது சாத்தியமா என்பது தெரியவில்லை என்கின்றனர் பணிகள் நிலுவையில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.