திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு வெறும் 106 ரன்னில் அடங்கியது.
தென்ஆப்பிரிக்காவை சீர்குலைத்த இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். இந்த இலக்கை இந்திய அணி லேகேஷ் ராகுல் (51 ரன்), சூர்யகுமார் யாதவ் (50 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற 23 வயதான அர்ஷ்தீப்சிங் கூறுகையில், ‘ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தது. இங்கு இந்த அளவுக்கு பந்து ‘ஸ்விங்’ ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவும், அணிக்கு என்ன தேவை என்பதற்கு தகுந்தபடியும் நம்மை மாற்றிக்கொண்டு பந்து வீசுவது மிகவும் முக்கியம்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியா செல்லும் போது, அங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம். பிறகு அதற்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளேன். இதில் தான் எங்களது கவனம் உள்ளது.
இந்த ஆட்டத்தில் நான் வீழ்த்திய 3 விக்கெட்டுகளில் டேவிட் மில்லரின் (0) விக்கெட் எனக்கு பிடித்தமானது ஆகும். ஏனெனில் அந்த பந்தை நான் ‘அவுட்ஸ்விங்கராக’ வீசுவேன் என்று எதிர்பார்த்தார். அதற்கு பதிலாக நான் ‘இன்ஸ்விங்காக’ வீசி அவரை வெளியேற்றினேன். அதை பார்க்கவே சிறப்பாக இருந்தது’ என்றார்.
அடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 2-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.