குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் – ரூ.29 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

சூரத்,

பா.ஜனதா ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில், டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார்.

முதலில், சூரத் நகருக்கு அவர் விமானத்தில் போய்ச் சேர்ந்தார். விமான நிலையம் அருகில் உள்ள கோடதாராவில் இருந்து லிம்பாயத் பகுதிவரை இரண்டரை கி.மீ. தூரத்துக்கு அவர் வாகன பேரணியாக சென்றார்.

காரில் நின்றபடி, சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களையும், பா.ஜனதாவினரையும் பார்த்து கையசைத்தபடியே அவர் சென்றார்.

பின்னர், சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியில், ரூ.3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார். இவற்றில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களும் அடங்கும்.

குடிநீர் வினியோகம், கழிவுநீர் திட்டங்கள், வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகர திட்டம், மின்சார வாகன உள்கட்டமைப்பு திட்டங்கள், பல்லுயிர் பெருக்க பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சூரத்தில் ஒவ்வொரு வீட்டையும் வளர்ச்சி சென்றடைந்துள்ளது. இந்த திட்டங்கள், வாழ்க்கையை எளிதாகவும், தொழில் செய்ய உகந்ததாகவும் மாற்றக்கூடியவை. நாட்டின் அனைத்து பகுதி மக்களும் வாழக்கூடிய இந்த சூரத் நகர், ஒரு மினி இந்தியா.

சூரத் நகரில், வைர தொழிலையும், ஜவுளி தொழிலையுமே நம்பி உள்ளனர். தற்போது தொடங்கப்பட்டுள்ள வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகர திட்டம் முடிந்தவுடன், உலகிலேயே பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் திகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல் சி.என்.ஜி. முனையம்

சூரத்தில் இருந்து பாவ்நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு 2 கி.மீ. தூரம் வாகன பேரணியாக சென்று பொதுமக்களை நோக்கி கையசைத்தபடியே சென்றார். அங்கு ரூ.5 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

அவற்றில், உலகின் முதலாவது சி.என்.ஜி. முனையமும் அடங்கும்.

அதைத்தொடர்ந்து, ஆமதாபாத் சென்ற பிரதமர் மோடி, நரேந்திர மோடி மைதானத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதே நிகழ்ச்சியில், தேசார் நகரில் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஸ்வர்னிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார்.

பின்னர், நவராத்திரி விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயில்

2-ம் நாளான இன்று, காந்திநகர் ரெயில் நிலையத்தில், காந்திநகர்-மும்பை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், அம்பாஜியில் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.7 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட 45 ஆயிரம் வீடுகளை திறந்து வைக்கிறார்.

அம்பாஜி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். கப்பர் தீர்த்தத்தில் மகா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 2 நாள் நிகழ்ச்சிகளிலும் அவர் மொத்தம் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.