ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் 2023 ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.