“அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் மோடி” மோடியை அர்ச்சித்த விஸ்வநாதர் ஆலய தலைமை பூசாரி…

அவுரங்கசீப்பை விட அதிக கோயில்களை இடித்தவர் என்ற பெயருடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் நரேந்திர மோடி என்று விஸ்வநாத ஆலய தலைமை பூசாரி தெரிவித்துள்ளார்.

ஞானவாபி மசூதி சர்ச்சை தொடர்பாக விஸ்வநாதர் ஆலய தலைமை பூஜாரி மற்றும் பரம்பரை அறங்காவலரான ராஜேந்திர பிரசாத் திவாரி உடன் நியூஸ்-கிளிக் என்ற இணைய இதழ் நடத்திய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை புணரமைக்கவும் அதன் பிரகாரத்தை விரிவுபடுத்தவும் ரூ. 339 கோடி செலவிலான முதல் கட்ட திட்டத்தை  பிரதமர் மோடி 2021 டிசம்பரில் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு விஸ்வநாதர் ஆலய பிரகாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கங்கையில் முழுகி காசி விஸ்வநாதரை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த விரிவாக்கப்பணிக்காக, அங்குள்ள ஞானவாபி மசூதியை கையகப்படுத்த நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி காரணமாக, மசூதி மற்றும் ஆலய கட்டுமான குழு இரண்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடத்தில் தான் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்திருந்தது என்றும் அந்த ஆலயத்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஞானவாபி மசூதி குறித்தும் காசி விஸ்வநாதர் ஆலயம் குறித்தும் ராஜேந்திர பிரசாத் திவாரி பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். நியூஸ்-கிளிக் மின்னிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் :

விஸ்வநாதர் ஆலயத்தை அவுரங்கசீப் இடித்ததாக கூறுபவர்கள் அதனை கட்டியது மற்றொரு மொகலாய மன்னரான அவுரங்கசீப்பின் கொள்ளுத்தாத்தா அக்பர் தான் என்பதை கூற மறுப்பது ஏன் ? என்ற கேள்வியுடன் தொடங்கிய அவர் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை முன்வைத்தார்.

1595 ம் ஆண்டு மன்னர் அக்பர் ஆட்சிக்காலத்தில் நாராயணபட் மற்றும் ராஜா தோடர்மால் ஆகியோரின் முயற்சியால் காசி விஸ்வநாதர் கோயில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டதற்கும் அதற்கு அக்பர் ஆதரவளித்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளது.

இதுபோன்ற வரலாற்று உண்மைகளை திரித்து தங்களுக்கு சாதகமானவற்றை மட்டும் மக்கள் மத்தியில் பரப்பும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

ஷாஜஹானுக்கு அடுத்து ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய அவரது மூத்த மகன் பட்டத்து இளவரசன் தாரா ஷிக்கோ வாரணாசியில் தங்கி சமஸ்கிருதம் பயின்றார் என்பதற்காக காழ்ப்புணர்ச்சியுடன் அவுரங்கசீப் 1669 ம் ஆண்டு செய்ததாக கூறப்படும் செயலை தற்போது மோடியும் கையிலெடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மன்னராட்சி காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்காக மக்களாட்சி காலத்தில் தீர்வு காண நினைப்பது விவேகமற்ற செயல் என்றும் சாடினார்.

ராஜேந்திர பிரசாத் திவாரி

தற்போது எந்தவொரு காரியத்தையும் மோடி மேற்கொள்ளவில்லை சட்டமும் நிர்வாகமும் தான் மேற்கொள்கிறது என்றால் அவுரங்கசீப் நேரடியாக களமிறங்கி இதனை இடித்ததற்கான ஆதாரம் இருக்கிறதா ?

ஷாஜஹானின் மகன் தாரா ஷிக்கோ-வுக்கு சமஸ்கிருதம் பயிற்றுவித்த குடும்பத்தில் பிறந்தவர்கள் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதேபோல், காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் அருகில் ஒரு வீட்டையும் என் முன்னோர்களின் பெயரில் தாரா ஷிக்கோ பட்டா வழங்கியுள்ளார்.

அவுரங்கசீப் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தாரா ஷிக்கோ-வுக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்படலாம் என்ற செய்தி பரவியது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மூலவரை எங்கள் வீட்டில் கொண்டுவந்து எங்கள் முன்னோர்கள் பத்திரப்படுத்தி வைத்தார்கள்.

அவுரங்கசீப் படையெடுப்பால் விக்ரகத்துடன் அந்த கோயில் பூஜாரி கிணற்றில் குத்தித்து விட்டதாக சொல்லப்பட்டதை சுற்றுவட்டார மக்கள் நம்பினர்.

கோயில் இடிக்கப்பட்ட பின் அதன் பிரகாரத்தின் மீதே மசூதி அமைப்பதற்காக சுவர் எழுப்பப்பட்டது என்றபோதும் அதன் வெளிப்பிரகாரத்தில் உள்ள இந்து கடவுளரின் உருவங்களை அங்கு செல்லும் மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், 1707 ம் ஆண்டு அவுரங்கசீப் மறைவை அடுத்து சிவலிங்கத்தின் இருப்பிடம் குறித்து மக்களுக்கு தெரியவந்ததையடுத்து மராட்டியர்கள் வழிவந்த ஹோல்கர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி அஹில்யாபாய் ஹோல்கர் (1725 – 1795) கோயில் கட்ட விரும்பினார்.

சிவலிங்கம் இருந்த இடத்தையும், வீட்டின் ஒரு பகுதியையும் எங்கள் முன்னோர்களிடத்தில் கேட்டுப்பெற்ற ராணி அஹில்யாபாய் இங்கு கோயில் கட்டினார். இந்த விவரம் கோயிலின் வரலாறு குறித்து அப்போது வைக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், பிராமணர்களையும் பழமை வாய்ந்த இந்து கோயில்களையும் பாதுகாக்க வேண்டும் என்று பனராஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஆணையிட்ட அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலை இடிக்க சொன்னது குறித்த உண்மை மட்டும் விளங்கவில்லை.

அதுமட்டுமன்றி, இங்குள்ள வேறு சில இந்து மடங்களுக்கு நிலங்களையும் அவுரங்கசீப் தானம் செய்ததற்கான ஆதாரங்கள் மற்றும் உத்தரவுகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள ஜங்கம்வாடி மடத்தில்  அவுரங்கசீப் நிலம் வழங்கியதற்கான ஆதாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வைத்திருந்ததை 2018 – 19 ம் ஆண்டு வாக்கில் இங்கு  வருகை தந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டி அதனை அகற்றும்படி கூறியுள்ளார்.

இதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் செயல்திட்டம் என்ன என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை என்று ராஜேந்திர பிரசாத் திவாரி கூறினார்.

மேலும், ஞானவாபி மற்றும் விஸ்வநாதர் ஆலய பிரகார விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து இங்குள்ள மக்களும், மடங்களும் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் விசாரணையின்றி தள்ளுபடியும் செய்யப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பெயரில் ஐந்து பெண்கள் தொடர்ந்த வழக்கில் மட்டும் நீதிமன்றம் முனைப்புடன் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.

1991 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்தபோது இருந்த அதே நிலை தொடரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட பாபர் மசூதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் எடுத்து வரும் நடவடிக்கை இப்படி ஒரு சட்டம் இருப்பதையே கேள்விக்குறியாகியுள்ளது என்றும் கூறினார்.

விஸ்வநாதர் ஆலய பிரகார திட்டத்திற்காக இதுவரை இங்கிருந்த ஸ்தல விருட்சங்கள் மட்டுமன்றி சுமார் 286 சிவலிங்கங்கள் அகற்றப்பட்டுள்ளது அதில் 146 லிங்கங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு கோயிலை இடித்ததாக அவுரங்கசீப் மீது ஆதாரமற்ற பொய்யை கூறி இந்துமதம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிலைகளை அகற்றி வரும் நரேந்திர மோடி அவரை விட மிகவும் மோசமான ஆட்சியாளராக வரலாற்றிலும் மக்கள் மனத்திலும் இடம்பிடித்துள்ளதோடு இந்துக்களின் மனதை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார் என்று ராஜேந்திர பிரசாத் திவாரி குற்றம்சாட்டியுள்ளார்.

துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி (மறைவு செப். 11, 2022)

அதோடு, ஆலய குளத்தில் சிவலிங்கம் இருப்பதாக தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது, என் வாழ்நாளில் இதுவரை நான்கு ஐந்து முறை அந்த குளத்தை சுத்தம் செய்துள்ளோம் இதுவரை நான் எந்த சிவலிங்கத்தையும் கண்டதில்லை. இந்த நிலையில் குளத்தில் குச்சியை வைத்து பார்த்ததாக ஆய்வுகள் துறை ஆணையர் தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

துவாரகா சங்கராச்சாரியாருடன் இணைந்து விஸ்வநாதர் ஆலயத்தின் பழமையை காக்க, தான் எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தங்கள் மீது அரசியல் சாயம் பூசப்பட்டதாகவும் தற்போது சங்கராச்சாரியார் மறைவுக்குப் பிறகு தான் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் ராஜேந்திர பிரசாத் திவாரி.

 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.