அயோத்தியா: ராமர் ஜென்ம பூமியான அயோத்தியில் அரசுப் பள்ளியில் மதிய உணவில் பரிமாறப்பட்ட உணவு வீடியோ வெளியாகி அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகி இருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில், தரையில் அமர்ந்தபடி பள்ளிக் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதத்துடன் உப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.
தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவரின் பெற்றோரால் படம்பிடிக்கப்பட்ட வீடியோ, குழந்தைகள் தரையில் அமர்ந்து மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாதம் மற்றும் உப்பை சாப்பிடுவதைக் காட்டுகிறது.
“ஆசிரியர் பொறுப்பேற்க மறுக்கிறார், கிராமத் தலைவரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. அப்படி என்றால் இதற்கு யார் பொறுப்பு?” என்று கேமராவில் ஒருவர் கேள்வி கேட்கிறார். அந்த வீடியோவை எடுத்தவரின் அல்லது பேசுபவரின் அவரது முகம் தெரியவில்லை.
“இந்தக் குழந்தைகளெல்லாம் சோறும் உப்பும் சாப்பிடுவதைப் பார்க்கலாம். அத்தகைய பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப யார் விரும்புவார்கள்? முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். என்று சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் சொல்லப்படுகிறது.
A video of children at a primary school in UP’s Ayodhya being served boiled rice and salt as mid day meal has surfaced. pic.twitter.com/5wVaE9XWKC
— Piyush Rai (@Benarasiyaa) September 28, 2022
இந்த வீடியோ வைரலானதையடுத்து, அரசு தொடக்கப் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் செவ்வாய்கிழமை நடந்தது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
“அடிப்படை கல்வி அதிகாரி (பிஎஸ்ஏ) மூலம் விசாரணை நடத்தப்படும். பள்ளியின் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதிய உணவின் போது மாணவர்கள் சாக்குப் பை ஒன்றின் மீது உட்கார வைக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின் படியோ, நிர்ணயிக்கப்பட்ட மெனுவின்படியோ மாணவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில்லை என்றும், பள்ளி தலைமை ஆசிரிய பள்ளிக்கு எப்போதாவதுதான் வருகிறார் என்றும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பது கூட தெரியாத அளவில் உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் இந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னரும் இதே போல், பள்ளிக் குழந்தைகளும் வெறும் சாதமும் உப்பும் மட்டுமே மதிய உணவில் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளையாட்டு வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்ட வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.