பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15, 2021ல் பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்காக ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக உழைத்து வந்தனர். முன்னதாக நியூ டெல்லி – வாரணாசி மற்றும் நியூ டெல்லி – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த வரிசையில் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மும்பை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. காந்தி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரயிலை கொடியசைத்து இந்த ரயிலை தொடங்கி வைத்தார். இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படவுள்ளது.
முந்தைய இரண்டு ரயில்களை விட 16 வினாடிகள் கூடுதல் வேகத்துடன் பயணிக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு விஷயங்களில் அப்கிரேட் (2.0) செய்யப்பட்டிருக்கிறது. காந்தி நகர் முதல் மும்பை சென்ட்ரல் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு 115 கோடி ரூபாய் ஆகும். முந்தைய வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய 54.6 வினாடிகள் எடுத்துக் கொண்டன. ஆனால் இந்த லேட்டஸ்ட் ரயில் 52 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதுவும் புல்லட் ரயிலின் சாதனையை முறியடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய ரயில்களை விட சற்று எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிவேகமாக செல்லும் போது பயணிகள் மிகவும் சவுகரியமான அனுபவத்தை பெறுவர். ரயில் பாதையில் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் நின்றால் கூட தடையில்லாமல் பயணிக்கும் திறன் பெற்றது. ரயிலில் உள்ள இருக்கைகள் 180 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேட்டிக் கதவுகள், ஏசி சேர் கார் பெட்டிகள் கொண்டுள்ளன. இந்த ரயிலின் உள்ளே பயணிகள் சுவாசிக்கும் காற்றில் 90 சதவீதம் கிருமிகள் அற்றதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வேறெந்த ரயிலிலும் இல்லாத வசதியாகும். அதுமட்டுமின்றி வைஃபை வசதி, எல்சிடி டிவிகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.