புதுடெல்லி: “காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், “காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. அவர்கள் காலாவதியாகிப் போன மருந்துகள். அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களை எதிர்க்கட்சியாக உணர்வதே இல்லை. பெயரளவிற்கே எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் தாங்களே ஆளும் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி வலுக்கட்டயமாக தங்களிடமிருந்து பிரதமர் பதவியை பறித்து விட்டதாகவும், அது அவர்களுக்கே சொந்தமானது என்றும் நினைக்கிறார்கள். காங்கிரஸ், தாம் ஒரு இயல்பான கட்சி என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகத்தை நாம் பார்க்க முடியும்.
ஆட்சியில் இருக்கும் போது, காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளை கலைக்க சட்டப்பிரிவு 365- ஐ தவறாக பயன்படுத்தியது. நரேந்திர மோடி காங்கிரஸின் ஒற்றை கட்சி முறைக்கு பெரும் சவாலாக இருக்கிறார். அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறார். நாட்டில் குடும்ப ஆட்சி முறையை காங்கிரஸ் தான் உருவாக்கியது. அவர்கள் 10 ஜன்பத் என்ற முகவரியில் இருந்து ஒட்டுமொத்த நாடும் இயங்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அது மீண்டும் நடக்கப்போவதே இல்லை” இவ்வாறு அசாம் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார். சுமார் இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 2015ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.