மதுரை: தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா,உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்ததால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் 2013-ல் தடை விதித்தது.
இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதும், பலர் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. இதனால், ரோபோட் இயந்திரங்களைப் பயன்படுத்தி மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
மனுதாரர் தரப்பில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மனிதக்கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்வது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், ‘நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மனிதக் கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள் எப்போது, எங்கு எடுக்கப்பட்டன என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தாக்கல் செய்யும் ஆவணங்கள் உண்மையாக இருக்கும் நிலையில் ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். ஆவணங்கள் பொய்யானதாக இருந்தால் மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். மேலும், மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதற்கான தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்பான ஆவணங்களை அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.