நெல்லை: போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்த தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல போலி பத்திரப்பதிவு புகார் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலக தணிக்கை பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் அஞ்சனகுமார் குமார் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையிலும், போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டம் ஏற்படுத்தப்பட்டு, அந்த சட்டம் செப்டம்பர் 29ந்தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அன்றைய தினமே வேலையே பயிரை மேய்ந்த கதையாக தென்காசி சார்பதிவாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜ செட்டியார் என்பவரின் மகள் லலிதா தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசில் அளித்த புகாரில், ஆயிரப்பேரியில் தனக்கு சொந்தமாக உள்ள ஒன்னே முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண்-1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், சார்பதிவாளர் மணி, நிலத்தை எழுதி வாங்கிய சோமசுந்தர பாரதி, சாட்சி கையெழுத்திட்ட வடிவேல், தனசீலன் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தென்காசியை சேர்ந்த முகமது ரபிக், சுரண்டையை சேர்ந்த பவுன்ராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
அதுபோல புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார் குமார் வீட்டில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இவர் மதுரையில் பணியாற்றியபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான பத்திர பதிவுகளை முறைகேடாக செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். பின்னர் சில மாதங்கள் தேனிக்கு இடமாறுதலாக அங்கும் பணியாற்றி உள்ளார். அவர் மீதான புகார்களின் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், அஞ்சனகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் தற்போது பணியாற்றி வரும் புதுக்கோட்டைக்கு இன்று அதிகாலை வந்தனர். புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அஞ்சனகுமார் வசித்து வரும் புதுக்கோட்டை நகர் பகுதியான கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனையை தொடங்கினர். அதிகாலை 6.30 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அஞ்சனகுமார் எங்கெங்கலெ்லாம் சொத்துக்களை வாங்கியுள்ளார், வங்கி உள்ளிட்டவகையில் அவரது முதலீடு எவ்வளவு, அது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அஞ்சனகுமாரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.