பொன்னியின் செல்வன்:“கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகம்;காரணம் இதுதான்!" தஞ்சாவூரில் நடிகர் பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படம் மிகுந்த எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பொன்னியின் செல்வனில் நடித்ததையும், படத்தை சோழ தேசமான தஞ்சையில் வந்து பார்ப்பதையும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுவதாக தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தை காண வந்த பார்த்திபன்

உலகமே வியக்கும் வண்ணம் ஆட்சி செய்த சோழமன்னர்கள். கலைக்கும்,கட்டடக் கலைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை, மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு இன்றளவும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்ற தஞ்சாவூர் பெரியகோயில் போன்றவை சோழர்களின் பெருமையை பறைசாற்றி வருகின்றன.

மக்கள் பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை, வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதற்கு கடன், நீர்நிலைகள், விவசாயம் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்தி காட்டி மிகச் சிறந்த மக்களாட்சியைப் புரிந்தவர் ராஜராஜ சோழன். சோழர்களின் ஆட்சி முறை உலக மக்களால் வியந்து பேசப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் தியேட்டரில் பார்த்திபன்

சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நூல் சோழர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகவும்,மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள உதவியது. பொன்னையின் செல்வன் நூலை தழுவி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். விகரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பொன்னியின் செல்வன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.தஞ்சாவூரில் மட்டும் மூன்று தியேட்டர்களில் படம் ரிலீஸாகியிருக்கிறது. சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் உள்ள சாந்தி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். தியேட்டர் மேலாளர் தாமரை, பார்த்திபனுக்கு உற்சாக வரவேற்ப்பு கொடுத்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொன்னியின் செல்வன் பாகம் – 1

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பார்த்திபன், “தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ சோழனுக்கு வணக்கம். பொன்னின் செல்வன் திரைப்படத்தைத் தஞ்சை மண்ணில் பார்ப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.1973 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராஜராஜசோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன்.அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க வந்துள்ளேன்.

நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய் விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். எல்லா சினிமாவையும் வரவேற்பது என்னுடைய பழக்கம். பொன்னியின் செல்வன் படத்தை வெற்றி பெறச் செய்வோம். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததுடன், அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதைப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.

பொன்னியில் செல்வன் படம் பார்த்த பார்த்திபன்

படத்தை பார்ப்பதற்கு பெண்கள் அதிக அளவில் வந்துள்ளது கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவலுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கல்கியின் எழுத்துக்கள் தான் அதற்கான முதல் வெற்றி. அடுத்த வெற்றி படத்தை இயக்கியிருக்கும் மணிரத்னத்திற்குக் கிடைத்துள்ளது.

இதில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையானது. நான் படத்தை பார்ப்பதற்காக வரவில்லை, பென்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.