ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தேர்வு நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினமே அந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்து ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் பாலாஜி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பள்ளியின் தலைமையாசிரியர் வினாத்தாளை அறிவியல் பாட ஆசிரியரிடம் வழங்கியது தெரியவந்தது. அவர் தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாளை மாணவர்களிடம் வழங்கிப் படித்து வரச்சொல்லியிருக்கிறார். அதையடுத்து, தலைமை ஆசிரியர்மீது காழ்ப்புணர்ச்சியிலிருந்த அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் ஒருவர் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த வினாத்தாளை தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்து மற்றொரு நபரின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வெளியிட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலர் பாலாஜி விசாரணை அடிப்படையில் வினாத்தாள் வெளியாகக் காரணமாக இருந்த தலைமையாசிரியை மீனாம்பாள், கணித ஆசிரியர் குமரவேல், அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.