ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
கொரோனா பரவல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று (செப்.30-ம் தேதி) கடைசி நாள். இதை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை வங்கி (IPPB) சேவை மூலம் சமர்ப்பிக்கலாம். இ-சேவை மையம் (e-seva centre) மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக சமர்ப்பிக்கலாம்.
ஜீவன் பிரமான் முகம் செயலியை (Face App) பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு ஜீவன் பிரமான் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழினை பதிவு செய்யலாம்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.