காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 கோடி ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்துள்ளது. உளவு தகவல் அடிப்படையில், சூரத்தில் காம்ரிச் நகர் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அகமதாபாத் – மும்பை சாலையில் நோயாளியின்றி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறைத்து சோதனை செய்தனர். அப்போது 2 பெட்டிகள் முழுவதுமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1290 இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் காவல்துறையிடம் சிக்கின.
இந்நிலையில் காவல்துறை பறிமுதல் செய்த 25 கோடியே 80 லட்சம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் போலியானவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி என்பதற்கு பதில், ரிவர்ஸ் வங்கி என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் இது சினிமா படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் ரூபாய் என்று பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த போலி ரூபாய் நோட்டு கட்டுகள் எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன? என்பது பற்றி சூரத் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.