137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி, 3 ஆண்டுகளாக தலைவர் யார்? என்று மாறி மாறி கேட்டு கொண்டு சலிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நேரு குடும்பம் மட்டுமே தலைவர் பதவிக்கான நாற்காலியை அலங்கரித்து வந்த நிலையில், ராகுல் காந்தி வைத்த முற்றுப்புள்ளி புதியவரை தேடும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதற்கான போட்டியில் யாரெல்லாம் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி நேரம் வரை பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதலில் அசோக் கெலாட் பெயர் அடிபட்டது. இவருக்கு சோனியா காந்தி குடும்பத்தினர் ஆதரவளிக்க ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் குழப்பம் வெடித்தது. இதனால் சோனியாவை சந்தித்து போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறி எஸ்கேப் ஆனார். அடுத்து சசி தரூர், திக் விஜய் சிங் ஆகியோர் ரேஸில் நிற்க லேட்டஸ்டாக மல்லிகார்ஜுன கார்கேவும் சேர்ந்து கொண்டார்.
இதனால் திக் விஜய் தலைவர் பதவிக்கான ரேஸில் இருந்து விலகிக் கொண்டார். தனது ஆதரவை மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அளிக்கப் போவதாக அறிவித்துவிட்டார். தற்போது சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவர் மட்டுமே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
அதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சோனியா காந்தி குடும்பத்தினரின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவிற்கே சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இருவரும் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் அடுத்த காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தலித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்புடையவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து பேசக் கூடியவர்.
பொதுக் கூட்டங்கள் ஆகட்டும், செய்தியாளர்கள் சந்திப்புகள் ஆகட்டும். சொல்ல வேண்டிய விஷயத்தை கச்சிதமாய் சொல்லி விடுவார். கட்சியினர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக இன்னும் 17 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.