ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கோலிவுட்டை ரூல் செய்துவருபவர் த்ரிஷா. 20 வருடங்களுக்கும் மேலாக டாப் 5 ஹீரோயின்களில் த்ரிஷாவும் தன்னை தக்கவைத்திருக்கிறார். அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நிலைத்து நின்றாலும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் குந்தவை கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் ஒரு வைரக்கல் என்றே கூறலாம். ஏனெனில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் தன்மையை எழுத்தாளர் கல்கி அப்படி வார்த்திருப்பார்.
ராஜராஜ சோழன் ஆட்சிப்புரிந்த காலக்கட்டத்தில் அவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியும், நந்தினியின் சூழ்ச்சியை மதி நுட்பத்தால் வீழ்த்தியும் என குந்தவை கதாபாத்திரம் பொன்னியின் செல்வனின் உயிர் நாடிகளில் ஒன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி நாவலை வாசித்தவர்கள் மனதில் குந்தவைக்கு என்று எப்போதும் தனி இடம் இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் இன்று வெளியாகியிருக்கிறது. இதனால் இன்றைய நாள் த்ரிஷாவின் வாழ்க்கையில் எப்போதும் ஸ்பெஷலாகவே இருக்கும்.
Kundavai and her maker
Thank you Mani sir for it all
See you in the theatres.
30.9.2022 pic.twitter.com/dK24ri6zLL— Kundavai (@trishtrashers) September 29, 2022
ஆனால் இதற்காக மட்டும் அவருக்கு இன்றைய நாள் ஸ்பெஷல் இல்லை. இன்னொரு விஷயத்துக்காகவும் த்ரிஷாவுக்கு இன்றைய நாள் ஸ்பெஷல். அதாவது, த்ரிஷா திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னதாக மாடலாக இருந்தார். மிஸ் சென்னை பட்டம் வாங்கியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். அப்படி அவர் கடந்த 1999ஆம் ஆண்டு இதே நாளில்தான் (செப்30) அவர் மிஸ் சென்னை பட்டம் பெற்றார்.
மிஸ் சென்னை பட்டம் வாங்கி பிரபலமடைந்த நாளன்றே பொன்னியின் செல்வனும் ரிலீஸ் ஆகியிருப்பதை அடுத்து த்ரிஷாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மேலும், படத்திலும் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பதாகவும் ரசிகர்கள் புகழ்ந்துவருகின்றனர்.