தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்… – வேகம் காட்டுகிறதா காவல்துறை?!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பா.ஜ.க., ஆர்,எஸ்,எஸ் அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 23 -ஆம் தேதி கோவை குனியமுத்தூரில் பாஜக பிரமுகர் பரத் என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார் தீப்பிடித்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய 7 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த சூழலில், பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் காருக்கு தீ வைப்பு வழக்கில் இருவரை கடந்த 25-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதேபோல், மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அபுதாகிர் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பெட்ரோல் குண்டு வீசும் காட்சி

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பேருந்திலிருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு அடுத்த நாளே, கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடலைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இச்சம்பவத்தில், குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். 

கோவை பா.ஜ.க கண்டனக் கூட்டம்

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பல மாவட்டங்களில் பதட்டமான சூழல் உருவாகியிருக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.கவினர் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இனியும் அசம்பாவித சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, சென்னையில் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இரண்டு நாள்களில் மட்டும் 450க்கும் மேற்பட்ட விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. 

சைலேந்திர பாபு, டிஜிபி

இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு ரோந்து பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. பல இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. கோவையில் மட்டுமே 3,500 போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில், மொத்தம் 19 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.