ஒன் லைன்ல நிச்சயமா இந்தப் படத்தோட கதையைச் சுருக்க முடியாது. ஏகப்பட்ட ஒன்லைனர்ல ஒண்ணு மட்டும் சொல்லலாம். சோழ ராஜ்ஜியத்துக்கும், சோழ ரத்தத்துக்கும் ஆபத்து வந்தால், அதற்கு ஒரு பழிவாங்கும் படலமும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு வாரிசும் பின்னணியில் இருந்தால் அதுவே பொன்னியின் செல்வன்.
இளவரசன் ஆதித்த கரிகாலனின் ஆணைக்கிணங்க அரசரையும், இளவரசன், இளவரசியைச் சந்திக்கப் புறப்படும் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்கத் துடிக்கும் நந்தினி, பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் மூலம் மன்னராக விரும்பும் மதுராந்தகன் என ஒவ்வொருவரும் காய் நகர்த்த யாருக்கு யாரால் ஆபத்து, யார் உதவி செய்றாங்க, பின் விளைவுகள் என்ன அப்படிங்கிறதுதான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தோட சுருக்கமான கதை.
இளவரசர் ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனிடம் மூணு அசைன்மென்ட்டைக் கொடுக்கிறார். கடம்பூர் சம்புவரையர் அரண்மனைக்குப் போய் அங்கே என்ன நடக்குதுன்னு பார்க்கணும், தப்பா நடந்தா அப்பாவும் அரசருமான சுந்தரசோழர்கிட்ட தகவல் சொல்லணும், தங்கை குந்தவையச் சந்திச்சு நடந்ததைச் சொல்லணும்னு கட்டளையிடறார். கரிகாலனின் நண்பன், வீரன், ஒற்றன் வந்தியத்தேவன் அதை ஏத்துக்கிட்டு கடம்பூர் சம்புவரையர் அரண்மனைக்கு வர்றார்.
வழியில ஆழ்வார்க்கடியான் நம்பியைச் சந்திக்குறார். அரண்மனையில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் ரகசியக் கூட்டம் நடந்ததும் அதை அறிஞ்சு அரசர் சுந்தர சோழருக்குத் தகவல் சொல்றார். அப்படியே சின்ன பழுவேட்டரையர் கண்ல மண்ணைத் தூவிட்டு நந்தினியைச் சந்திச்சிட்டு குந்தவையையும் பழையாறை அரண்மனையில சந்திக்குறார். குந்தவை நடந்ததை வந்தியத்தேவன் மூலம் தெரிஞ்சுக்கிட்டு அதிர்ச்சியாகுறாங்க. தம்பி அருண்மொழி வர்மனை இலங்கையில இருந்து தஞ்சைக்கு அழைத்து வரணும்னு கட்டளையிடறாங்க. காதலையும் மறைமுகமாகச் சொல்றாங்க. அந்த மகிழ்ச்சியோட வந்தியத்தேவன் இலங்கைக்குப் பயணமாகுறார்.
இதுக்கு இடையில மதுராந்தகன் என்ன செய்றார், நந்தினியின் சூழ்ச்சிக்கான பின்னணி என்ன, ஆதித்த கரிகாலன் ஏன் தஞ்சைக்கு வர மறுக்கிறார், இலங்கையில் இருக்கும் பொன்னியின் செல்வன் என்ன ஆனார், வந்தியத் தேவனின் பயணம் என்ன ஆனதுங்கிறதை ரொம்ப சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிற படம்தான் பொன்னியின் செல்வன் பாகம் 1.
மணிரத்னத்தைச் சும்மா சொல்லக்கூடாது. இலக்கியத்தை, வரலாற்றுப் புனைவுக் கதையை இவ்ளோ அழகா செதுக்க முடியுமான்னு ஆச்சர்யப்படுத்தி இருக்காரு. மணிரத்னம் ரசிகர்கள், படத்துல நடிச்ச கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள், பொதுவான நாவலைப் படிக்காத சினிமா ரசிகர்கள், நாவலைப் படித்தவர்கள் இப்படி எல்லோரையும் திருப்திப்படுத்த முடியுமான்னு கேட்டா, கஷ்டம்னுதான் சொல்லுவோம்.
இன்னும் ஆழமா சொல்லணும்னா வீட்டுக்கு வீடு இன் ஜினீயரிங் படிச்சவங்க அதிகம்னு சொல்ற மாதிரி பொன்னியின் செல்வன் படிச்சவங்களும் அதிகம். அவங்களைத் திருப்திப்படுத்துறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா, மணிரத்னம் அசால்ட்டா ஸ்கோர் பண்ணி என்னால முடியும்னு நிரூபிச்சிருக்கார். வழக்கமா இதிகாச பாதிப்புல படம் எடுக்கிறது மணிரத்னம் ஸ்டைல்.
இது வரலாற்றுப் புனைவுக் கதையாச்சேன்னு பார்த்தா 40 வருஷ அனுபவத்தை அப்படியே இறக்கி வைச்சு ஆச்சர்யப்படுத்தி இருக்கார். இந்தப் படத்தை எடுக்க முழு தகுதி எனக்குதான் இருக்குன்னு சொல்லாம சொல்லியிருக்கார்.
ஆதித்த கரிகாலனா கோபமும் வீரமும் கொண்ட முரட்டு இளவரசனா, நந்தினியை மறக்க முடியாமல் தவிக்கும், அவஸ்தைப்படும் ஆண்மகனா விக்ரம் நல்ல பெர்பாமன்ஸைக் கொடுத்திருக்கார். தம்பிக்காக வீராவேசமா புறப்படும் அந்தக் காட்சியும், போர்க்களத்தில் வாள் வீசும் அறிமுகக் காட்சியும் அதகளம்.
படம் முழுக்க அசால்ட்டா ஸ்கோர் பண்றது, சிரிக்க வைக்குறது, மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கிறது வந்தியத்தேவனா நடிச்ச கார்த்திதான். சின்ன சின்ன கேப்லயும் கெடா வெட்டி விருந்து வைக்கிற அளவுக்கு நடிப்புல பின்றாரு. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமின்னு ஒருத்தரை விடாம வழிஞ்சு பேசுறது, காதல் மயக்கத்தையும், த்ரிஷா மீதான விருப்பத்தையும் லாவகமா வெளிப்படுத்துறது, ஆழ்வார்க்கடியான் நம்பியா நடிச்ச ஜெயராமை சாதாரணமா டீல் பண்றது, சரத்குமார், பார்த்திபனைத் தாண்டி நந்தினியைச் சந்திக்குறது மனுஷன் இயல்பா நடிச்சு இதயத்துல இடம் பிடிக்குறாரு.
பொன்னியின் செல்வன், அருண்மொழி வர்மனா டைட்டிலுக்கு நியாயம் சேர்த்திருக்காரு ஜெயம் ரவி. ராஜ கம்பீரம், தூதுவனின் செய்தி அறிந்து எதிர்வினையாற்றும் சாதுர்யம், பகை வென்று முடிக்கப் புறப்படும் போர்க்குணம்னு ரவி காந்தமா ஈர்க்குறாரு.
ஐஸ்வர்யா ராய் வன்மம், வஞ்சகம், சூழ்ச்சின்னு எல்லாத்தையும் கண்கள் வழி நடிப்புலயே காட்டி அசர வைக்குறாங்க. நந்தினி கேரக்டர்ல இவங்களை விட்டா வேற யாரையும் யோசிக்க முடியாத அளவுக்கு இருக்கு.
குந்தவை கதாபாத்திரத்தில் புத்திசாலியா, எல்லா சதிகளையும் முறியடிக்கிற ராஜ தந்திரம் நிறைஞ்சா இளவரசியா த்ரிஷா பின்னி எடுத்திருக்கார். அதுவும் சிற்றரசர்களின் ரகசியச் சந்திப்பை ஒன்னும் இல்லாம ஆக்குற, குட்டையைக் குழப்புற அந்த சீன் பிரமாதம். ஐஸ்வர்யா ராயை எதிர்கொள்ளும் இடத்துலயும் வேற லெவல் நடிப்பு. ஐஸ்வர்யா ராயைத் தாண்டி ஸ்க்ரீன் பிரசன்ஸ்ல பிரமாதப்படுத்துறாங்க.
சுந்தர சோழரா பிரகாஷ்ராஜும், பெரிய பழுவேட்டரையரா சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையரா பார்த்திபனும், திருக்கோவிலூர் மலையமானா லாலும், ஆழ்வார்க்கடியான் நம்பியா ஜெயராமும், பூங்குழலியா ஐஸ்வர்யா லட்சுமியும் பாத்திரம் அறிந்து உணர்ந்து அவர்கள் நோக்கத்தை எந்தக் குறையுமில்லாம நிறைவேத்துறாங்க.
கொடும்பாளூர் இளவரசி வானதியா ஷோபிதா, சேந்தன் அமுதனா அஸ்வின், ரவிதாசனா கிஷோர், ராஷ்டிரகூட மன்னரா பாபு ஆண்டனி, செம்பியன் மாதேவியா ஜெயசித்ரா, பார்த்திபேந்திர பல்லவனா விக்ரம் பிரபு, கடம்பூர் சம்புவரையரா நிழல்கள் ரவி, சிற்றரசர்களில் ஒருவரா பாலாஜி சக்திவேல், அநிருத்த பிரம்மராயரா மோகன்ராம், வீரபாண்டியனா நாசர், அப்புறம் வினோதினி வைத்தியநாதன், ரியாஸ்கான், மாஸ்டர் ராகவன்னு பெரிய படையே நடிச்சிருக்காங்க. இவங்க எல்லோருமே கதாபாத்திரத்துக்கு உரிய நியாயத்தைச் செய்திருக்காங்க.
முக்கியமா இதுல சொல்ல வேண்டியது… கதாபாத்திரத் தேர்வுகள். காஸ்டிங்ல மணிரத்னத்தை அடிச்சுக்க முடியாது. அந்த அளவுக்கு பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி செதுக்கி இருக்காரு. நட்பு, பகை, வஞ்சம், காதல் உள்ளிட்ட உணர்வுகளையும் சரியாக கொண்டு வந்துள்ளார். நாவலில் உள்ளதுபோல அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க முடியாதது தெரிகிறது.
டெக்னிக்கல் டீமும் ஒட்டுமொத்த உழைப்பையும் அப்படியே கொடுத்திருக்காங்க. ஆக்ச்சுவலி பேப்பர்ல எழுதுறதை சீனா மாத்துறது, அதை ஒளிப்பதிவு மூலம் ரசிகர்களுக்குக் கடத்துறது சாதாரண விஷயமில்லை. அதை ரவிவர்மன் ரொம்ப நல்லாவே பண்ணி இருக்காரு. போர்க்களக் காட்சி, அரண்மனைக் காட்சிகள், வந்தியத் தேவன் உலா, அந்த படகு சண்டைக் காட்சின்னு மிரட்டி இருக்காரு. வர்ணனைகளை அப்படியே காட்சி வடிவத்துல 100% காட்டியிருக்காங்கன்னு கூட சொல்லலாம்.
ரஹ்மான் இசையும், பின்னணியும் அவ்வளவு பொருத்தம். பொன்னி நதி பார்க்கணுமே, தேவராளன் ஆட்டம், ராட்சச மாமான்னு பாடல்களோட பிளேஸ்மெண்ட்டும் பொருத்தமா இருக்கும். இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்குது. பொன்னி நதி பாட்டுல ஈ ஆரி எச மாரின்னு ஒரு வரி வரும்.
ஈ + ஆரி + எச + மாரி என பிரித்தால் ஈ – வில், ஆரி – வீரன், எச – இசை, மாரி – மழை என பொருள்படும். அதாவது ‘வில் வீரனின் இசை மழை’ என்பதை தமிழ் ஒற்றை வார்த்தை அர்த்தத்தை வைத்து பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இவ்வாறு இயற்றியிருக்கிறார்னு சோஷியல் மீடியாவுல வைரலாகுது. அந்த அளவுக்கு டீ கோட் பண்ண ஆரம்பிச்சாட்டாங்க. வாழ்த்துகள் இளங்கோ கிருஷ்ணன். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் நேர்த்தியும், ஒழுங்கும் மிளிருது.
மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமாரவேல் கூட்டுழைப்பில் உருவான திரைக்கதை ரொம்பவே நம்பகத்தன்மையுடன், மூலக்கதையுடன் துருத்தாம அப்படியே இருக்கு. வீரபாண்டியன் கொலை, நந்தினி ஆதித்த கரிகாலனிடம் கெஞ்சும் படலம், அருண்மொழி வர்மன் – வந்தியத்தேவன் சந்திப்புன்னு சில விஷயங்கள் கொஞ்சம் சினிமாவுக்காக நீட்டி முழக்காம குறைச்சு இழைச்சிருக்காங்க.
பெரிய அளவுக்கு சர்ச்சைகள், விமர்சனங்கள் இந்தப் படத்துல எழாத அளவுக்கு வசனங்களும் இருக்கு. அதுவும் கார்த்தி பேசுற வசனங்கள் சிரிப்புக்கும் ரசனைக்கும் முழு உத்தரவாதம். என்ன ஒன்னு, புத்தரும் பெருமாளின் இன்னொரு வடிவம்தான்னு சர்ச்சையை கிளப்பாம இருந்திருக்கலாம்.
மொத்தத்துல பார்த்தா நாவலைப் படிக்காத ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் திருப்திப்படுத்துற ஒரு நல்ல தரமான படமா இருக்கும். நாவலைப் படிச்சவங்களுக்கு அந்த கேரக்டர் ஆர்க்கை அழுக்குப் படியாம அழகா வடிச்ச விதத்துலயும், கேரக்டர்களோட இண்ட்டர் லிங்க் சுவாரஸ்யத்துலயும், நாவலின் ஆன்மாவைச் சிதைக்காம எடுத்த விதத்துலயும் மறக்க முடியாத செம்ம அனுபவத்தைக் கொடுக்கும்.
நாவல் டூ சினிமா, வரலாற்றுப் புனைவைப் பார்க்கும் ஆவல், சோழ சாம்ராஜ்ஜியத்தின் கதையைத் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா, யார் நடிப்பில் விஞ்சி நிற்பதுன்னு ஒரு கிரேட் எக்ஸ்பீரியன்ஸை அனுபவிக்கத் தயாரா இருந்தா நீங்களும் பொன்னியின் செல்வன் படத்துக்கு விசிட் அடிக்கலாம்.!!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ