'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு – குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரச்சாரப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், போலீசாரும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் கள்ள நோட்டு புழக்கம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், ரூ. 25 கோடி கள்ள நோட்டுகளை குஜராத் போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர். 

சூரத் நகரில் அகமதாபாத் – மும்பை நெடுஞ்சாலையில், ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்தனர். அதில், 2000 ரூபாய், கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைதுசெய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அந்த கள்ள ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக, ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டு, யாரிடம் கொடுப்பதற்கு எடுத்தச்செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறியது. 

இதுகுறித்து, சூரத் காவல் துறை கண்காணிப்பாளர் ஹித்தேஷ் ஜோய்ஷார் கூறுகையில்,”காம்ரேஜ் போலீசாருக்கு அகமாதாபாத் – மும்பை நெடுஞ்சாலையில், கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் நடத்திய சோதனையில், அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பிடித்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்துள்ளார். ஆம்புலன்ஸில் மொத்தம் 6 அட்டைப்பெட்டிகளில், 1290 பாக்கெட்டுகள் இருந்துள்ளன. பாக்கெட் முழுவதும் ரூ. 25.80 மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. 

முதலில், கள்ள நோட்டு என்று தெரியாமல்,  யாருடைய கருப்பு பணம் இது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அதில் ரிசர்வ் என்பதற்கு பதிலாக, ரிவர்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தை கண்டபின் தான் அது கள்ள நோட்டு என தெரியவந்தது.

தேர்தலையொட்டிதான் இந்த கள்ள நோட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அந்த ரூபாய் நோட்டுகளில் ‘இது திரைப்பட படப்பிடிப்புக்கு மட்டுமானது’ என குறிப்பிடப்பட்டுள்ளது அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோட்டுகள், சட்டவிரோதமாக புழக்கத்திற்காக எடுத்துவரப்பட்டதா அல்லது, சினிமா படப்பிடிப்பிற்கானதா என்பது குறித்து போலீசார் தரப்பில் தகவல் ஏதும் இல்லை. முதற்கட்டமாக, பிடிப்பட்ட ரூ.25 கோடி கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டு 24 மணிநேரமாகியும் இதுகுறித்த குழப்பம் நீடித்து வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.