இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் – மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும்.
மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் காந்திநகரில் உள்ள ராஜ் பவனுக்கு பிரதமர் சென்றுகொண்டிருந்தார்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi, en route from Ahmedabad to Gandhinagar, stopped his convoy to give way to an ambulance pic.twitter.com/yY16G0UYjJ
— ANI (@ANI) September 30, 2022
அப்போது, அகமதாபாத் – காந்திநகர் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைத்தொடர்ந்து, பிரதமரின் கான்வாய்களில் இருந்த இரண்டு கார்கள் ஆம்புலன்ஸ் வருவதை கண்டு இடதுபுறத்தில் ஒதுக்கி நின்றது. இந்த வீடியோவை குஜராத் பாஜகவினரும், தனியார் செய்தி முகமை ஒன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளன.
பிரதமர் கான்வாயின் இந்த முன்னுதாரண செயலை கண்டு சமூக வலைதளங்களிலும் பலரும் பாரட்டி வருகின்றனர். இந்த காணொலியும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குஜராத்தின் பயணத்தின் இறுதிநாளான இன்று மாலை, பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்பாஜி கோயிலில் ஆரத்தி நிகழ்வில் பங்கேற்கிறார்.