வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது இதில் கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் ரூ.40 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட அமைச்சர் துரைமுருகன் பூமி பூஜை துவங்கி வைத்தார். இதன் பின்னர் வள்ளிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சீர் வரிசைகளை கொடுத்து கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார்.
முன்னதாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொன்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஓ.பன்னீர் செல்வம் துரைமுருகன் இரட்டை வேடம் போடுகிறார் என கூறியது குறித்து கேட்டதற்கு ஓ.பன்னீர் செல்வம் கலங்கி போய் பெனாத்துகிறார். ஆந்திர அரசு அணைக்கட்டுவதை தடுக்க நாங்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்கு உள்ளது. அவ்வாறு ஆந்திர அரசு செய்தால் வழக்கை நாங்கள் விரைவுப்படுத்துவோம்.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகள் அணைகள் மதகுகள் பராமரிக்கபடவில்லை. இதனால் தான் கிருஷ்ணகிரியில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பி குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அதனை தற்போது சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதனை திரும்பி கூட பார்க்கவில்லை.
தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது குறித்து மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அஸ்வினி குமார் திமுக பயங்கரவாதத்திற்கு துணை போவதாக கூறுகிறார். அவர் விவரம் தெரியாத மந்திரி நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு துணை போனதில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை குறித்து கேட்டதற்கு தடை வந்த பிறகு பார்த்துகொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.