கரூர்: பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளிக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியதுடன், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சிவாயம் கீழக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் திருமுருகன் (37). கூலித்தொழிலாளி. திருமணமாகி மகள் உள்ளார். இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் அவர் வீட்டருகே வசிக்கும் பிளஸ் 1 படிக்கும் 15 வயது சிறுமியின் பெற்றோர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் இரவு சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துக் கொண்ட திருமுருகன் அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து சப்தம் போட்டால் கொன்று விடுவேன் எனக்கூறி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் இல்லாவிடில் கொன்று விடுவேன் என மிரட்டி சிறுமி தனியாக இருக்கும் போதெல்லாம் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி மாதவிலக்கு ஆகாததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்தப்போது சிறுமி நடந்ததை குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கடந்தாண்டு ஜூலை 8 புகார் அளித்தார். புகாரின்பேரில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமிக்கு ஜூலை 23 கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருமுருகனை கைது செய்து, சிதைவான கருவை சேகரித்து, திருமுருகன், சிறுமிக்கு மரபணு பரிசோதனை செய்ததில் சிறுமி கருவுற்றதற்கு திருமுருகன் தான் காரணம் என்பது நிரூபணமானது.
இவ்வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற விரைவு நீதிபதி ஏ.நசீமாபானு இன்று (செப். 30) அளித்த தீர்ப்பில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, போக்சோவின் கீழ் ஆயுள் கால சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அதனை கட்டத்தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம் அதனை கட்டத்தவறினால் மேலும், 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து இவற்றை திருமுருகன் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.