எனது முந்தைய கட்டுரையில் கூறியிருந்தபடி, இப்பதிவில் சுவிட்சர்லாந்து நாட்டில் சுத்தம் பேணுவதைப்பற்றிச் சற்று விரிவாகவே தந்துள்ளேன்!என்னதான் நாடோடியாக இருந்தாலும்,பிறந்த இடத்தை மனம் விட்டுக் கொடுக்காதல்லவா?எனவே நமது நிலையையும் நினைவு கூர்ந்துள்ளேன்!
‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு!’
‘கூழானாலும் குளித்துக் குடி!’
என்று தூய்மையின் மேன்மை குறித்து நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள்! கூறியபடியே அவர்களும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள் என்பதன் அடையாளமே ‘கீழடி’ அகழ்வாய்வின் முடிவுகள்!
நமது காலத்தில்தான் அவற்றைப் புதையுண்டு போகச் செய்து விட்டோம். அதனால்தான் 2014 அக்டோபர் 2 ந்தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று நமது பிரதமர் ‘தூய்மை இந்தியா’ (Swachh Bharat Abiman)திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில மதங்கள் தூய்மையையே தெய்வங்களாக மதித்து வழிபடுவதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
பாருங்க. சுவிஸை எப்படிச் சுத்தமா வெச்சிருக்காங்கறதைப் பற்றி எழுத வந்துட்டு, இந்தியாவைப் பற்றி எழுதறது என்ன நியாயம்னு நீங்க முணங்கறது எனக்கும் கேட்குதுங்க. என்ன செய்ய? பிறந்த மண் பாசத்தை விட்டுற முடியுமா எளிதில?எவ்வளவு உயரத்தில பறந்தாலும் விமானம் கீழிறங்கும்போதுதானே அதன் பயன் நிறைவேறுது. அது மாதிரி உலகமெல்லாம் சுற்றினாலும் வளர்த்த மண்ணை வணங்கத்தானே தோணுது. அதன் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம்னு நினைக்கத்தானே தோணுது. புகுந்த வீட்டில் புகழ்ச்சியோ…இகழ்ச்சியோ…பிறந்த வீட்டின் நினைவுகளை மறக்காத பெண் போல…நல்லதைப் பார்க்கும் போதெல்லாம், இதெல்லாம் நமது நாட்டிலும் இருந்தால் நல்லாயிருக்குமே என்ற எண்ணந்தானோ நாட்டுப்பற்று!சரி!வாருங்கள் சுவிசில் எவ்வாறு தூய்மை பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்!
நமது ஊர்களில் முன்பெல்லாம், ‘அடுப்பங்கரையே ஆரோக்கியத்தின் பிறப்பிடம்’ என்பார்கள்.
நல்ல சமையல் மூலமே நோயற்ற, ஆரோக்கியமான வாழ்வு கிட்டும் என்பதாலேயே. இன்றைக்கும் கிராமப் புறங்களில், விருந்தினர்களுக்கு ஓட்டல்களிலிருந்து சாப்பாடு வரவழைத்துக் கொடுத்தால், ’கடையில வாங்கிப்போட்டுக் கதையை முடிச்சிட்டான்!’ என்று விருந்தினர்கள் குறைபட்டுக் கொள்வதுண்டு. வீட்டிற்கு வரும் விருந்தினரை, நாம் இதய சுத்தியுடன் சமைத்துப் போட்டு உபசரிக்க வேண்டுமாம்!
இங்கும் தூய்மைப்பணி ‘ஹேப்பி கிச்சனி’லேயே ஆரம்பமாகி விடுகிறது. ஆம்! சமையலறையில் ‘வாஷ் பேசினுக்குக் கீழேயே ‘ட்ராஷ் பேக்’ அதாவது குப்பை சேகரிக்கும் பை க்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிளாஸ்டிக் பையைப் பொருத்தி வைக்கிறார்கள்.
இந்தப் பையை மால்களில் உள்ள கடைகளில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பைகளில் மட்டுமே சேகரமாகும் குப்பைகளை நன்கு கட்டி,எடுத்துச் சென்று அருகிலிருக்கும் மூடப்பட்ட,பைபரிலான பெருந்தொட்டிகளில் சேர்க்க வேண்டும்.எல்லா வீட்டினரும் எளிதில் செல்லும் தூரத்தில்,போதுமான அளவுக்கு இந்தத் தொட்டிகள் உள்ளன.வீட்டிலுள்ள பேப்பரையோ,பீசா போன்றவற்றை வாங்கி வரும் அட்டைக் கழிவுகளையோ இந்தப் பைகளில் போடக்கூடாது.
நான் அமெரிக்காவில் இருந்தபோது, குப்பைகளை எந்தப் பைகளில் வேண்டுமானாலும் கட்டிப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். இங்கோ, குறிப்பிட்ட அந்தப் பைகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வேறு பைகளை உபயோகிக்கக்கூடாது. மக்களும் பொறுப்பாக அவ்வாறே செய்கிறார்கள். ஒரே அளவான பைகளாகவும், தரமானவைகளாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்வதாகத் தெரிகிறது.
நன்கு கட்டி எடுத்துச் செல்வதால், வழியில் குப்பை சிந்தவோ, சாலையில் பறக்கவோ வாய்ப்பே இல்லை. போதுமான மூடப்பட்ட தொட்டிகள் இருப்பதால், வெளியில் பைகள் தெரிவது கூட இல்லை! குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தத் தொட்டிகளிலுள்ள குப்பைகளை பெரும் கன்டெய்னர்களில் எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
தினசரி செய்தித் தாள்கள்(பேப்பர்கள்), கடிதங்கள், விளம்பர பேப்பர்கள், சிறுவர்கள் ஓவியம் வரையும் பேப்பர்கள், பெரியவர்களின் உபயோகிக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், படித்து முடிக்கப்பட்ட தேவையற்ற புத்தகங்கள் போன்றவற்றைக் கட்டாகக் கட்டி, அவர்கள் மாத ஆரம்பத்திலேயே தெரிவித்திருக்கும் நாட்களில், வாசலில் வைத்து விட வேண்டும். அதுபோலவே அட்டைகளைத் தனியாகக் கட்டி வைத்து விட வேண்டும். குறிப்பிட்ட தினங்களில் இவற்றைத் தனித் தனியாக எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
அடுத்து, குளிர்பானங்கள், ஆயில்கள் போன்றவற்றை அடைத்து விற்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மால்களில் கலெக்ட் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். ஊறுகாய் மற்றும் மதுபான கண்ணாடி பாட்டில்களைக் கலெக்ட் செய்யவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள். அதுபோக, முக்கிய இடங்களிலும்,காரை நிறுத்தும் வசதிகளுடன் அவற்றை டிஸ்போஸ் செய்ய வசதிகள் உள்ளன.சாதாரண மற்றும் பச்சை,நீலம்,பழுப்பு என்று பல வண்ண பாட்டில்களை அந்தந்த நிறமுள்ள துவார வாயில்களில் இடவும் பிரத்யேக அமைப்பு உண்டு. இதன் மூலம் வண்ண பாட்டில்களின் ரீசைக்கிள் எளிது படுத்தப்படுகிறதாம்!
ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு நாய்கள் வளர்ந்தாலும், அவற்றின் குரைக்கும் சப்தத்தைக் கேட்பதே மிக அரிது. வாக் போகும்போது மட்டும் அவற்றைக் கூட அழைத்துச் செல்கிறார்கள். அவையும் பண்பட்ட அவற்றின் சொந்தக்காரர்கள் போலவே பாங்குடன் நடந்து கொள்கின்றன. ரயில்,பஸ்களில் ஓனருடன் ஏறி,ஒதுக்கப்பட்ட இடத்தில் அவை சமர்த்தாக அமர்ந்து கொள்வதைப் பார்க்கையில் நமக்கு வியப்பு மேலிடுகிறது.
நடைபாதைகளில்,சாலையோரங்களில்,மேலும் தேவைப்படும் இடங்களிலெல்லாம் அவற்றின் கழிவுகளைப்போட தனித்தொட்டிகள் உண்டு.தொட்டிகளை ஒட்டி,கழிவுகளைக் கலெக்ட் செய்யும் பைகளையும் வைத்துள்ளார்கள்.கைகளில் பைகளை மாட்டிக்கொண்டு,கைகளில் படாமல் அவற்றின் கழிவுகளைக் கலை நுணுக்கத்துடன் அதன் ஓனர்கள் செய்வதே தனி அழகு!
ஆடு,மாடுகள் வளர்ப்புக்கென்று தனியிடங்கள் உண்டு.அங்கும் அவை சாலைகளில் விடப்படுவதில்லை.பெரும் புல்வெளிகளைக் கம்பி வேலிகளால்(fencing)அடைத்து அவற்றின் உள்ளே விட்டு விடுகிறார்கள்.உள்ளேயே அவற்றிற்கான ஷெட்டுகளும்,பால் கறப்பதற்கான எந்திர அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே சாலைகளில் ஆட்டுப் புழுக்கைகளையோ, மாட்டுச் சாணத்தையோ பார்க்க முடியாது.
ஆறு,ஏரி என்று எந்த நீர் ஆதாரங்களிலும் குப்பைகூளங்களோ,பிளாஸ்டிக் கவர்களோ இல்லை.இன்னும் சிறிய ஆச்சரியம் என்னவென்றால்,ஆற்றங்கரைகளில் நெடிதுயர்ந்த மரங்கள்,நமது நாட்டுத் திருமணப்பெண்கள் பட்டிலும்,நகையிலும் பளபளப்பதைப்போல இலைகள்,காய்களால் செழித்து நின்றாலும்,ஆற்றில் இலைகளையோ,பழுப்புகளையோ காண முடிவதில்லை.அதே மரங்கள் இலையுதிர் காலத்தில் நமது அந்தக்கால விதவைகளைப்போல் காட்சியளிப்பதைக் காண்கையில் நமக்கே மனது இளகும்.பனிப் பொழிவைத் தாங்கப் படைத்தவனின் விளையாட்டு என்றே எண்ணத் தோன்றுகிறது.
வீட்டின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ‘செல்லார்’ஐ வீட்டின் அடித் தளத்தில் ஒதுக்கியுள்ளார்கள்.எப்போதாவது மட்டுமே பயன்படுத்தும் பொருட்களை அந்தச் சின்ன அறையில் வைத்துக் கொள்ளலாம்.(வீடுகளின் அமைப்பு குறித்துச் சொல்கையில் விரிவாகப் பார்ப்போம்)இதன் மூலம் வீட்டின் அடைசல் விலக்கப்படுகிறது.
வீட்டின் வாசலிலும் குப்பைத் தொட்டிகள்உண்டு!
பேரூந்து நிறுத்தங்களின் அருகிலும்,பொதுவாக மக்கள் கூடும் இடங்களிலும் போதுமான குப்பை சேகரிக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளார்கள்.எனவே ஊர்,நகரம் என்று எங்கணும் தூய்மை நிலவுகிறது.
சரி! நம்மூரோடு ஒரு சிறிய ஒப்பீடு செய்யலாமா? நாம் வெப்ப மண்டலப் பிரதேசத்தில் இருப்பதால் அதன் காரணமாக ஏற்படும் சூறாவளிக் காற்றுகளால் அதிகத் தூசு வீடுகளில் படிவதை நம்மால் தடுக்க முடிவதில்லை. அதிக மக்கட்தொகையுடன் பரந்து விரிந்த நாடென்பதால் தேவையான அனைத்து வசதிகளையும் செய்வதற்குச் சிரமப்படுகிறோம். தெருவோரத்தில் குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், வாசலைக் கூட்டும் தாய்மார்கள், சேர்ந்த குப்பையை வாசலில் இருக்கும் திறந்த கழிவு நீர்க்கால்வாயில் எளிதாகத் தள்ளுவதையே விரும்புகின்றனர்.
நேரமின்மை ஒரு புறம் என்றாலும் சட்டத்தை மதிக்கும் மனோ நிலையை நாம் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதும் மறுபுறம் காணும் உண்மை.சோம்பேறித் தனம் காரணமாகத்தான் ‘ரிமோட்கள்’அரசாள ஆரம்பித்து விட்டன.ஏ.சி.,க்கு,டி.வி.,க்கு என்று ஆரம்பித்து ஃபேனுக்கும் மற்றவற்றிற்கும் என்று தொடர ஆரம்பித்து விட்டன.இவைகள் விஞ்ஞான முன்னேற்றத்தின் அடையாளம் என்றாலும்,மனிதர்களின் சோம்பேறித் தனத்தின் சாட்சிகள் என்பதை மறுப்பதற்கில்லை.தினசரி சேரும் குப்பையைக் கழிவு நீர்க் கால்வாயில் தள்ளி நீர் வழியை அடைத்துவிட்டு,மழை பெய்ததும் வீட்டிற்குள் நீர் புகுவதாக‘கம்ப்ளைன்ட்’ செய்கிறோம்.
லெனின் காலத்தில்,ரஷ்யாவை வல்லரசாக்க அந்நாட்டு மக்கள் 18 மணி நேரம் உழைத்தார்களாம்.அப்படியும் அப்பொழுதிருந்த நிலையில் அரை வயிற்றுக்கு மட்டுமே அவர்களுக்கு ரொட்டி கிடைத்ததாம்!மீதி அரை வயிற்றை லெனினின் பேச்சே நிறைக்குமாம்.நாம் நம் நாட்டை வல்லரசாக்க வேண்டுமானால் அவ்வளவு கூடவேண்டாம் சட்ட திட்டங்களை மதித்து,உண்மையாய் 8 மணி நேரம் நேர்மையாக உழைத்தால் போதுமானது.
நான் இங்குள்ள நிலைகளை விளக்குவது,இதன் மூலம் நம் தாய் நாட்டில் சிறு மாற்றமாவது ஏற்பட வேண்டுமென்ற ஆதங்கத்தில்தான்.’நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கையுடன் நல்லவற்றுக்குக் கை கொடுப்போம்.
மீண்டும் சந்திப்போம்!…
-ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன்,சுவிட்சர்லாந்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.