வார இறுதி நாட்களில் கொழும்பு முதல் கண்டி வரையிலான சொகுசு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான ஆசன முன்பதிவுகளை முற்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும். கொழும்பு முதல் கண்டி வரையிலான ஒரு வழிப்பயண முதலாம் வகுப்பு ஆசனத்திற்கு 2000 ரூபாய் அறவிடப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
‘ரயில்வே எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புதிய புகையிரத பாதைகளை ஆரம்பித்தல்’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் பிரச்சினை காரணமாக, வார இறுதி நாட்களில் பயணங்களை மேற்கொள்பவர்கள் எதிர்நோக்கின்ற இடையூறுகளை நீக்கி, இலங்கை புகையிரத திணைக்களம் வார இறுதி நாட்களில் சொகுசு சுற்றுலா புகையிரத சேவையை ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது ரயில் சேவையாக கடந்த காலங்களில் வார இறுதி நாட்களில் எல்ல ஒடிஸ்ஸி சுற்றுலா புகையிரதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில் சேவையை வாரம் இருமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் கொழும்பு முதல் அநுராதபுரம் வரையிலான சொகுசு ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.