வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கலைந்திருந்த சட்டையையும் முடியையும் சரி செய்து கொண்டு கௌரவ் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் பொதுவாக சொன்னான்,”சார்!எனக்கு ஒரே ஒரு ஆசை”
கௌரவின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் சுமார் பத்து நாட்கள் முன்னே செல்லவேண்டும்.
ஓய்வு பெற்று வீட்டிலிருந்த செல்வராஜுக்கு எப்போதும் ஏதாவது பரபரப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டுமென்ற எண்ணம்.
பென்ஸனெர்ஸ் குழுவின் செயலாளர்.
அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியின் தலைவர்.
அனைவரும் செல்வாவென்று அழைப்பதே அவருக்கு பிடிக்கும்
யாராவது செல்வாவிடம்-உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டதென்றால் அவர் சொல்லும் பதில் இதுவாகத் தான் இருக்கும்,”என் மனைவியை சொல்ல சொல்லுங்கள்”
அந்த செல்வாவின் கண்களில் தான் அவன் தென்பட்டான்.
மாலை ஆறரை மணியிருக்கும். அந்தி சாய்ந்து பசுக்கள் எல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நேரம். சாதாரணமாக செல்வா மாலை செய்தி பார்த்துவிட்டு தொலைகாட்சி தொடருக்கு தயாராகும் நேரம். அந்த இடைவெளியில் செல்வா வீட்டின் வெளியே வந்த பொழுது தான் அவனை பார்த்தார்.
அவர் வீட்டின் காம்பௌண்ட் சுவற்றின் அருகே நின்று அவன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தான்.
அவ்வப்போது செல்வாவின் வீட்டை நோட்டம் பார்த்துக் கொண்டே யாருடனோ தாழ்ந்த குரலில் அந்த இளைஞன் பேசிக்கொண்டிருந்தான். செல்வா உள்ளே சென்று மொபைல் எடுத்து வந்து அவனை ஒரு ‘க்ளிக்’ செய்ய நினைக்குமுன் அவன் மறைந்திருந்தான்.
இதை சற்று நேரத்தில் அவர் மறந்தும் போயிருந்தார்.
அடுத்த நாள் மாலை செய்தி பார்க்கும் பொழுது அந்த இளைஞன் அவர் ஞாபகத்தில் வர, செல்வா வெராண்டாவில் நின்று கொண்டு ரோட்டையே பார்க்கத் தொடங்கினார்.
அன்றும் அந்த இளைஞன் அவர் வீட்டை கடந்து சென்றான், மொபைலில் பேசிக்கொண்டே,அவர் வீட்டை பார்க்காமலே
“நான் பார்ப்பதை பார்த்திருப்பான்” மனதினுள் செல்வா நினைத்துக்கொண்டார்.
வீட்டில் செல்வா விலை மதிப்புள்ள நகை நட்டுகள் அதிகம் வைத்துக் கொள்வதில்லை. அவர் மனைவி ஜெயாவையும் அனுமதிப்பில்லை. எனவே ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் அவரைப் பொறுத்தவரை இழப்பு அதிகம் இருக்கப் போவதில்லை. ஆனால் வேறு யாருக்கும் இழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொது நல்லெண்ணம் தான்.
அடுத்த நாள். அதற்கடுத்த நாள். தொடர்ந்து வந்தான்.
செல்வா முடிவு செய்துவிட்டார்.
அக்கம் பக்கத்து இளைஞர்கள் நாலைந்து பேரை சேர்த்துக்கொண்டார்.
ஜெயாவிற்கு ஒரே பெருமை.தனது கணவர் செல்வாவை நினைத்து தான்.
அன்றும் அந்த இளைஞன் வந்தான். செல்வா கேட்டை திறந்து அவனை வழிமறித்தார். நேரில் பார்ப்பதற்கு இன்னும் மெலிதாக தெரிந்தான்.
”இன்னா?” என்றான். வடக்கத்திய சாயல் தெரிந்தது.
“யார் நீ? தினமும் இந்தப் பக்கம் வர்றே?”
“உனக்கு இன்னா மேன்?”
இளம் கன்று பயத்தை காட்டிக் கொள்ளவில்லை.
அவர் ஏற்பாடு செய்திருந்தபடி ஒவ்வொறுவராக வந்து அவனை சுற்றி வளைக்கத் தொடங்கினார்கள்.
அந்த இளைஞன் அதை எதிர்பார்க்கவில்லை.
கண்களில் சற்று பயம் தெரிந்தது.
பக்கத்து வீட்டு ராம் தான் முதல் அடி அடித்தான். வலது கையால் அதை அந்த இளைஞன் ப்ளாக் செய்ய மற்றவர்களின் கோபம் அதிகரித்தது.
எல்லோரும் சேர்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்ததை அவனால் தடுக்க முடியவில்லை. பந்து போல் உடம்பை வளைத்துக் கொண்டான்.செல்வா தான் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
அந்த இளைஞன் மிகவும் பயந்திருந்தான். செல்வா மீண்டும் கேட்டார்,”யார் நீ?”
“எத்தனை பேர் இறங்கிருக்கீங்க?” அங்கு நடப்பதை பக்கத்து வீட்டு ப்ரியா மொபைலில் பதிவு செய்துகொண்டிருந்தாள்.
அந்த இளைஞன் மெல்லிய குரலில் தட்டுத்தடுமாறிய தமிழில் சொன்னான்,” இதோ எனது அடையாள அட்டை. நான் ரெய்ப்பூர்காரன். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றலாகி வந்திருக்கிறேன்.வேலை முடிந்து வீடு திரும்பும்பொழுது நடை பயிற்சிக்காக ட்ராஃபிக் அதிகம் இருக்கும் மெயின் ரோட் தவிர்த்து இந்த பக்கமாக வருகிறேன்”
அடையாள அட்டை அவன் பெயரை கௌரவ் குமார் என்றும் வங்கி அலுவலர் என்பதையும் உறுதி செய்தது.
தவறு உணர்ந்து ஒவ்வொருவராக கலையத் தொடங்கினார்கள்.
அனைவரும் கலையுமுன் கலைந்திருந்த சட்டையையும் முடியையும் சரி செய்து கொண்டு கௌரவ் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் பொதுவாக சொன்னான்,”சார்!எனக்கு ஒரே ஒரு ஆசை”
அனைவரும் கேள்விக்குறியுடன் அவனை நோக்கினர். கோ அஹெட் என்ற ஆமோதிப்பு அனைவரின் கண்களிலும் தெரிந்தது.
செல்வாவை அணுகிய கௌரவ்,யாரும் எதிர்பாரா வண்ணம் பளாரென்று செல்வாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.
இப்பொழுதும் கௌரவ் தினசரி அந்த வழியாகத் தான் தினமும் நடந்து வீடு திரும்புகிறான்.
ஆனால் செல்வா எனும் செல்வராஜ் அதிகம் வெளியில் வருவதில்லை.
–எஃப்.எம்.பொனவெஞ்சர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.