சென்னை: “காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பெண்களுக்கு எதிரான எந்த ஒரு புகார் கொடுத்தாலும் வழக்குகளை வேகப்படுத்தி முடிக்கும் வகையில் முதல்வர் உத்தரவிட்டு செயல்பட்டு வருகிறார். ஊட்டச்சத்து குறைப்பாடு இருக்க கூடாது என்பது முதல்வர், எங்களுக்கு கொடுத்த அறிவுரை. எனவே, குழந்தை உருவானது முதல் 1000 நாட்கள் வரை ஊட்டச்சத்துள்ள உணவு முறை முக்கியம்.
கர்ப்ப காலத்திலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சி 60% மேல் ஏற்பட்டு விடும். எனவே, ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆரோக்கியத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலல்வர் நிறைவேற்றி வருகிறார். அதற்கான ஓர் உன்னத திட்டம்தான் காலை சிற்றுண்டி திட்டம். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும்.
எடப்பாடி பழனிசாமி காலைச் சிற்றுண்டி திட்டத்தை அட்சய பாத்திர திட்டம் என அதிமுக காலத்தில் தொடங்கப்பட்டது என்று கூறியுள்ளார். யாரோ ஒரு என்ஜிஓ செய்ததை அவர்கள் சொல்கிறார். காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்” என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.