ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை, கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் பல பகுதிகளில் புழுதிகள் பறப்பதால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். மழை நேரங்களில் சகதிகாடாக மாறிவிடுகிறது. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், உப்பள தொழிளாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பல தரப்பட்ட மக்களும் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அத்திமரப்பட்டி- குலையன்கரிசல் இடையேயான சாலையை நேரில் பார்வையிட்டு புதிதாக சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.