புதுடெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், “பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக இருக்கும்போது, நீங்கள் என்ன தீர்வை எதிர்பார்க்கிறீர்கள்?” என ஓபிஎஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித்குமார், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர், “அதிமுகவில் தற்போதுவரை ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறார். ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டம் விதிப்படி நடைபெறவில்லை. இதை உயர் நீதிமன்ற அமர்வு கருத்தில் கொள்ளவில்லை. ஓபிஎஸ் தேவையில்லை என தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்” என்றனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தலாம்” என்றனர். அப்போது ஓபிஎஸ் தரப்பில், “அதுவரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர்.
அதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் சி.ஆர்யமா சுந்தரம், சி.எஸ்.வைத்யநாதன் ஆகியோர், “பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் இடைக்காலப் பொதுச் செயலாளருக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது” என்றனர்.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் பிரதான வழக்கின் முடிவு, இந்த வழக்கின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால், விதிகளை மீறி பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளதா என்பதை தீர விசாரிக்க வேண்டியுள்ளது. நீங்கள் தானே தற்போது அதிமுகவின் பொறுப்பாளராக இருக்கிறீர்கள். எனவே, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசரம் வேண்டியுள்ளது?” என்றனர்.
அதற்கு இபிஎஸ் தரப்பில், “உச்ச நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம்” என்று உறுதியளித்தனர். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது” என்று உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக பழனிசாமி தரப்பில் பதில் அளிக்கவும், அதற்கு ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை வரும் நவ. 21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.