புதுடெல்லி: தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் அளித்ததையடுத்து, மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, இனி 40 முதல் 50 கமாண்டோ படை வீரர்கள் முகேஷ் அம்பானியை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
‘இசட் பிளஸ்’ என்பது மிக உச்சபட்ச பாதுகாப்பு பிரிவாகும். நாட்டின் மிக முக்கியமான நபர்களுக்கே ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மும்பையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் முகேஷ் அம்பானிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பு ‘இசட்’ பிரிவிலிருந்து ‘இசட் பிளஸ்’ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.